இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்தது எப்படி? பிரதமர் மோடிக்கு சோனியா சரமாரி கேள்வி
ஹைலைட்ஸ்
- இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்தது எப்படி? சோனியா கேள்வி
- எத்தனை வீரர்கள், அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளனர்?
- எந்தெந்த பகுதிகள் சீனாவல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன?
New Delhi: இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்தது எப்படி என்பது குறித்தும், 20 ராணுவ வீரர்கள் நாட்டிற்காக எதற்காக தங்களது உயிரை தியாகம் செய்ய வேண்டியிருந்தது என்பது குறித்தும் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சோனியா காந்தி வெளியிட்டுள்ள 3 நிமிட வீடியோவில் பிரதமர் மோடிக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும், அதில் காங்கிரஸ் கட்சி ராணுவத்துடனும், அரசுடனும் துணை நிற்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமையன்று, இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், குறைந்தது 20 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதில், சீனா தனது தரப்பில் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பதை இதுவரை உறுதிப்படுத்த மறுத்துவிட்டது. இரண்டு அணுசக்தி நாடுகளுக்கு இடையிலான முதல் கொடிய மோதல் நிகழ்ந்து பல தசாப்தங்கள் கழித்து தற்போது இமயமலை எல்லையில் இந்தியாவுடன் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சோனியா காந்தி வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், அங்கு தற்போதைய நிலவரம் என்ன என்பதை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
நமது ராணுவ வீரர்களோ, அல்லது அதிகாரிகளோ யாரேனும் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளனரா? எத்தனை வீரர்கள், அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளனர்? எந்தெந்த பகுதிகள் சீனாவல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன? இந்த பிரச்னையை எதிர்கொள்ள அரசு என்ன திட்டமும், கொள்கையும் கொண்டுள்ளது? என அடுக்கடுக்காக சரமாரி கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வீடியோவாகவும், தனது ட்வீட்டர் பதிவிலும் பிரதமர் மோடிக்கும் சரமாரி கேள்வி எழுப்பியிருந்தார். இதைத்தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியும் இந்த விமர்சன வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது,
“ஏன் பிரதமர் அமைதியாக இருக்கிறார்? எதற்கு அவர் மறைந்து கொள்கிறார்? நடந்தது வரைக்கும் போதும். என்ன நடந்தது என்பது நமக்குத் தெரிந்தாக வேண்டும். நமது ராணுவ வீரர்களை சீனா எப்படி கொலை செய்யலாம். எப்படி அவர்கள் நம் நிலத்தை ஆக்கிரமிக்கலாம்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார் ராகுல் காந்தி.
ட்விட்டரில் இப்படி காட்டமான பதிவிட்டு சில மணி நேரங்களில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார் ராகுல். அதில் அவர் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவர், “இரண்டு நாட்களுக்கு முன்னர் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களின் குடும்பத்திடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளனர்.
சீனா நம் நிலத்தைப் பிடிங்கி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளது. எதற்காக நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள் பிரதமரே? எங்கு ஒளிந்திருகிறீர்கள்? நீங்கள் வெளியே வாருங்கள். மொத்த நாடும் உங்களோடுதான் துணை நிற்கிறது. நாங்கள் அனைவரும் உங்களோடுதான் இருக்கிறோம். வெளியே வந்து உண்மையைச் சொல்லுங்கள். பயப்பட வேண்டாம்,” என்று அவர் அதிரடியாக பேசியிருந்தார்.