ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் கேரள மாநிலத்தில் பெய்து வரும் மழையால், இதுவரை 160-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர். மேலும், 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அவசர நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளாவில் மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகளும், பயிர்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. சாலைகள் மற்றும் ரயில் தண்டவாளங்களும் மழைக்குக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தென்னக ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆகஸ்ட் 20 ஆம் தேதியன்று நிலைமையில், கேரளாவில் உள்ள இரண்டு வழித் தடங்களைத் தவிர மீதமுள்ள அனைத்துப் பாதைகளும் சரி செய்யப்பட்டு விட்டன. திருவணந்தபுரம் பிரிவின், புன்குன்னத்திலிருந்து குருவாயூர் செல்லும் வழி இன்னும் சரி செய்யப்படவில்லை. அதைப்போலவே மதுரை பிரிவின், புனலூரிலிருந்து செங்கோட்டைக்குச் செல்லும் பிரிவும் இன்னும் சீரமைக்கபடாமல் இருக்கின்றது. மற்றபடி, அனைத்து வழித் தடங்களும் சீராக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும் கேரளாவில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக மழையின் அளவு குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.