சர்ச்சைக்குரிய உத்தரவை தெற்கு ரயில்வே பிறப்பித்தது.
Chennai: தமிழகத்தில் மாநில மொழியில் ரயில்வே அதிகாரிகள் தகவல் பரிமாற்றம் செய்வதை தவிர்க்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. அதற்கு பதிலாக 'இந்தி மற்றும் ஆங்கிலத்திலே' தகவல் பரிமாற்றம் இருக்க வேண்டும் என ஆணை பிறப்பித்தது.
சமீபத்தில் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் எதிர், எதிரே வந்து மோதும் சூழல் உருவானது. ஆனால் உரிய நேரத்தில் இந்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மொழிப் பிரச்னையால் தகவல்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதும் தெரியவந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் ரயில்வே நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் தமிழில் இருப்பதை தவிர்க்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டது. மொழிப் பிரச்னையால் யாருக்கேனும் தகவல் புரியாமல் போவதை தவிர்க்க 'இந்தி அல்லது ஆங்கிலத்தில்' தகவல்களை பரிமாறிக் கொள்ள தெற்கு ரயில்வே ஆணை பிறப்பித்தது.
தெற்கு ரயில்வேயின் இந்த ஆணை தமிழகத்தில் புதிய சர்ச்சையை கிளப்பியது. இதுவும் இந்தி திணிப்பே என திமுக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
இந்நிலையில், சுற்றறிக்கையை திரும்பப் பெறுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தவறுதலாக வந்த அறிவிப்பு எனவும், பழைய நடைமுறையே தொடரும் என்றும் பொதுமேலாளர் அறிவித்துள்ளார்.
முன்னதாக, புதிய கல்விக் கொள்கையை வரையறுப்பதற்காக கஸ்தூரி ரங்கன் தலைமையிலான கல்விக்குழுவை மத்திய அரசு நியமித்திருந்தது. இந்த குழுவானது, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில், நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைத்தது.
இதைத்தொடர்ந்து, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைத்துரைக்கப்பட்டுள்ளதாக கடும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தை மத்திய அரசு இணையதளத்தில் வெளியிட்டது. அதில் இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமாக பயிற்றுவிக்கப்படும் என்ற பரிந்துரை நீக்கப்பட்டது.