காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த சிக்கலை எதிர்கொள்வது தொடர்பாக தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் இன்று கூடுகிறது.
காவிரி நீரை சேமித்து வைக்கும் நோக்குடன் மேதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா ஆயத்தமாகியுள்ளது. இதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்கு மத்திய அரசு அனுமதியளித்திருக்கிறது.
இதையடுத்து முன்பை விட கர்நாடக அரசு அணைகட்டுவதில் வேகம் காட்டி வருகிறது. இதனை எதிர்கொள்வது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்பாடு செய்திருந்தார். தமிழக அரசும் சட்ட ரீதியிலான போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய நீர்வள ஆணைய தலைவர் மசூத் உசேன் மீது தமிழக அரசு சார்பில் நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருச்சியில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
இந்த பரபரப்பான சூழலில், தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிவார் என்றும், இதன் மீது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கருத்துக்களை தெரிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின்னர் குரல் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சட்டசபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.