Special Buses for Pongal 2019: பொங்கலையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகையையொட்டி 24,708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதற்கான முன்பதிவை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கோயம்பேட்டில் இன்று தொடங்கி வைத்தார்.
முன்பதிவுக்காக கோயம்பேட்டில் சிறப்பு கணினி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை திறந்து வைத்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் பண்டிகை தினங்களையொட்டி கூடுதல் கட்டணங்களை ஆம்னி பஸ்கள் விதித்தால் மக்கள் புகார் அளிக்கலாம் என்று கூறினார்.
கோயம்பேட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் விஜயபாஸ்கர் கூறியதாவது-
பொங்கலையொட்டி சென்னையில் இருந்து மட்டும் 14,263 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மற்ற ஊர்களுக்கு 10,445 பேருந்துகள் இயக்கப்படும். ஆக மொத்தம் 24,708 பேருந்துகள் சிறப்பு பேருந்துகளாக பொங்கலையொட்டி இயக்கப்படுகின்றன.
கோயம்பேடு, தாம்பரம், பூவிருந்தவல்லி, மாதவரம், கேகே நகர் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதற்காக கோயம்பேட்டில் 26 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தாம்பரம், பூவிருந்தவல்லியில் 4 கணினி முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்தை நெரிசலை தவிர்க்க கார் உள்ளிட்ட வாகனங்கள் தாம்பரத்தில் இருந்து செல்வதை தவிர்க்கலாம். கோயம்பேட்டில் இருந்து புறப்படும் பேருந்துகள் பெருங்களத்தூர் வழியே செல்லாது.
பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் மக்கள் புகார் அளிக்கலாம். இவ்வாறு போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார்.