சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
கன்னியாகுமரி அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை, மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் உள்ள சோதனைச் சாவடியில், சிறப்பு உதவி ஆய்வாளராக வில்சன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், வில்சன் நேற்றிரவு தனது பணியில் இருந்தபோது, அங்கு வந்த இரண்டு பேர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இரவில் நிகழ்ந்த இச்சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், வில்சனின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் வில்சனின் தலை, மார்பு, கால் ஆகிய பகுதிகளில் குண்டுகள் பாய்ந்தது தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் முகத்தை மறைத்தபடி வந்த இளைஞர்கள் இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.
தொடர்ந்து, சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் வந்து விசாரணை நடத்தினார். மேலும் சம்பவ நேரத்தில் அந்த பகுதியில் இருந்த நபர் ஒருவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.