மொத்த படுக்கை வசதிகளின் எண்ணிக்கை அடிப்படையில் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று விதிமுறைகளில் தளர்வு
ஹைலைட்ஸ்
- சிறப்பு ரயில்களில் இருக்கைகள் அனைத்தும் நிரப்பப்படும் - ரயில்வே
- ’ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில்’ 24 பெட்டிகள் உள்ளன.
- இனி அதிகபட்சமாக 3 ரயில் நிலையங்களில் நின்று செல்லும்
New Delhi: நாடு முழுவதும், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பி செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான விதிமுறைகளில் மாற்றம் செய்து இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, ஒவ்வொரு சிறப்பு ரயிலிலும், அந்த ரயிலில் உள்ள படுக்கை வசதி எண்ணிக்கை அடிப்படையில் பயணிகளும் அதே அளவில் சமமாக இருக்க வேண்டும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக இத்தனை நாட்களாக ரயில்களில் நடு படுக்கை வசதி பயன்படுத்தாமல் இருந்த நிலையில், இனி, மொத்த படுக்கை வசதிகளின் எண்ணிக்கை அடிப்படையில் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று விதிமுறைகளில் தளர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
'ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில்' 24 பெட்டிகள் உள்ளன. இதில், 72 இருக்கைகள் கொண்ட ஒரு பெட்டியில் சமூக விலகலை கடைபடிப்பதற்காக 54 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த சிறப்பு ரயில்கள் மூலம் மே.1ம் தேதி வரை மட்டும் 5 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.
இதேபோல், புறப்படும் மாநிலத்தில் இருந்து சென்று சேரும் மாநிலம் வரை இடைநிற்காமல் செல்லும் வகையில் இருந்த சிறப்பு ரயில்கள் இனி அதிகபட்சமாக 3 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, ஒரு நாளில் 300 ரயில்கள் இயக்கும் அளவுக்கு ரயில்வேயிடம் திறன் உள்ளது. எனினும், அதனையும் நாங்கள் அதிகரிக்க விரும்புகிறோம். அடுத்த சில நாட்களில் முடிந்தவரை புலம்பெயர் மக்களை சொந்த ஊர் அழைத்துச்செல்ல விரும்புகிறோம். இதற்காக மாநில அரசுகளின் ஒப்புதல்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக போக்குவரத்தும் முடங்கியதால், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்தே சென்றனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர் திரும்பி செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
(With inputs from PTI)