திடீரென அமலாக்கப்பட்ட முழு முடக்க(LOCKDOWN) நடவடிக்கையின் காரணமாக லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் பல மாநிலங்களில் சிக்கித்தவித்தனர்
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 35 ஆயிரத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில் தற்போது தொற்று பரவலால் பாதிக்கப்படாத மற்றும் அறிகுறிகள் இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள், யாத்திரிகர்கள் அல்லது சுற்றுலாப் பயணிகளை தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்புவதற்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 4:30 மணியளவில் தெலுங்கானாவிலிருந்து ஜார்கண்டிற்கு 1,200 புலம் பெயர் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சிறப்பு ரயில் புறப்பட்டது. 24 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் வழக்கமாக 72 பேர் ஒரு பெட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், தற்போதைய நிலையில் ஒரு பெட்டிக்கு 54 பேர் வீதம் தனி மனித இடைவெளியைக் கணக்கில் கொண்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோன்று இரண்டாவது ரயில் கேரளாவின் எர்ணாகுளத்திலிருந்து மாலை 6 மணிக்கு ஒடிசாவில் உள்ள புவனேஷ்வருக்கு புறப்பட உள்ளது. சுமார் 1,000 பேரைக் கொண்டு செல்லும் இந்த ரயிலானது புவனேஸ்வருக்கு சென்றடையும் வரை அதில் பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இந்த ரயில் புவனேஷ்வர் சென்ற பிறகு கிருமி நாசினியால் முழுமையாக சுத்தப்படுத்தப்படும் என நிர்வாகம் கூறியுள்ளது.
இந்த இரண்டு இரயில்களைத் தொடர்ந்து பல மாநில அரசுகளிடமிருந்து சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை வந்துள்ளதாக ரயில்வே மண்டல அலுவலகம் தெரிவித்துள்ளது.
தற்போது புலம் பெயர் தொழிலாளர்களின் நிலைமையானது மத்திய அரசுக்கு பெரும் விமர்சனத்தை உருவாக்கியிருப்பதால் இவ்வாறு தொழிலாளர்களைச் சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப அனுமதியளிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
முன்னதாக மத்திய அரசு புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. அதன் பின்னர் பேரிடர் மீட்பு கட்டமைப்புகளை பலப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.
தேசிய அளவில் முன்னேற்பாடுகள் இல்லதா வகையில் திடீரென அமலாக்கப்பட்ட முழு முடக்க(LOCKDOWN) நடவடிக்கையின் காரணமாக அனைத்து தொழில்கள் மற்றும் போக்குவரத்தும் முற்றிலுமாக முடக்கப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் பல மாநிலங்களில் சிக்கித்தவித்தனர். இவ்வாறு சிக்கித்தவித்த தொழிலாளர்கள் பலர் ஆயிரம் மைல்கள் வரை நடந்தே தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் சென்றடைய தொடங்கினர். அதில் சிலர் வழியிலேயே உயிரிழந்தனர். இதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசானது, புலம் பெயர் தொழிலாளர்கள் எங்குத் தங்கியுள்ளார்களோ அந்த மாநில அரசுகளே அவர்களை பாதுகாக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. ஆனால், மத்திய அரசின் அறிவுறுத்தல்கள் தோல்வியில் முடிந்த நிலையில் மீண்டும் தொழிலாளர்கள் நடக்கத் தொடங்கினர். எனவே சிறப்பு ரயில்களை இயக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.
இந்த நிலையில் முழு முடக்க நடவடிக்கை மே 3-ம் தேதியுடன் முடிவடைய இருக்கக்கூடிய நிலையில், ஏற்கெனவே தெலுங்கானா மாநில அரசு ஊரடங்கினை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.