This Article is From Sep 23, 2019

அதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள்.. நடிகர் விஜய்க்கு ஜெயக்குமார் பதிலடி!

போட்ட பணத்தை எடுக்க, படம் ஓட வேண்டும் என்பதற்காக எங்கள் மீது இதுபோன்ற விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

அதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள்.. நடிகர் விஜய்க்கு ஜெயக்குமார் பதிலடி!

விஜய்யோ, கவுண்டமணியோ, செந்திலோ யார் வேண்டுமானாலும் கட்சியைத் தொடங்கலாம்.

அதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள் என்பது வரலாறு என நடிகர் விஜய்யின் பேச்சுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.  

முன்னதாக, சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுபஸ்ரீ. ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் சுபஸ்ரீ, கடந்த 12ஆம் தேதியன்று, பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியன் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையின் மீடியனில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது கவிழ்ந்து விழுந்தது. இதில் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். 

தமிழகம் முழுவதும் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்து, பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட் அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று திமுக, அதிமுக, அமமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களது நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தன. 

தொடர்ந்து, அரசியல் கட்சிகள் மட்டுமின்றி சினிமா நடிகர்களும் தங்களது ரசிகர்களுக்கு பேனர்கள் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தினர். நடிகர் சூர்யா தனது ரசிகர்கள் யாரும் கட்-அவுட், பேனர்கள் வைக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார். இதேபோல், நடிகர் விஜய்யும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் பேனர் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தார்.

இதனிடையே, அண்மையில் சென்னையில் நடந்த பிகில் பாடல் வெளியிட்டு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய், பேனர் விழுந்து, லாரி ஏறி சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் யார் மீது கோவப்பட வேண்டுமோ அவர்கள் மீது கோவப்படாமல் லாரி டிரைவர் மீதும் பேனர் அச்சடித்தவர் மீதும் பழிபோடுகிறார்கள் என்று கூறினார். 

அத்துடன், சுபஸ்ரீ விவகாரத்தில் ட்விட்டரில் ஹேஷ்டேக் போட்டால் நன்றாக இருக்கும். சமூக வலைத்தளங்களில் நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும். என்னுடைய போட்டோவை உடையுங்கள், போஸ்டரை கிழியுங்கள் ஆனா என் ரசிகர்கள் மீது கை வைக்காதீங்க என்றும் விஜய் தெரிவித்திருந்தார். 

நடிகர் விஜய்யின் இந்த பேச்சு அதிமுகவினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையல், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், சுபஸ்ரீ குறித்து விஜய் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 

அதிமுகவை தொட்டால்தான் ஆளாக முடியும் என தொடுகிறார்கள். ஆனால் அதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள் என்பது தான் வரலாறு. போட்ட பணத்தை எடுக்க, படம் ஓட வேண்டும் என்பதற்காக எங்கள் மீது இதுபோன்ற விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. பழுத்த மரம் தான் கல்லடி படும், அதிமுக பழுத்த மரம்.

விஜய்யோ, கவுண்டமணியோ, செந்திலோ யார் வேண்டுமானாலும் கட்சியைத் தொடங்கலாம். ஆனால் மக்களுக்கு என்ன செய்ய போகிறார்கள் என்பதைதான் சொல்ல வேண்டும் என்று அவர் கூறினார்.

.