கடந்த மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்தி பயணிக்க அந்நாட்டு அரசு அனுமதி மறுத்தது.
New Delhi: கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி, டெல்லியில் இருந்து காபூலுக்குச் சென்ற, 120 பேர் கொண்ட ஸ்பைஸ்ஜெட் (SpiceJet) பயணிகள் விமானம், பாகிஸ்தானின் (Pakistan) வான்வழிக்கு மேலே சென்றபோது அந்நாட்டு விமானப் படையால் தடுத்து நிறுத்தப்பட்டதாக அரசு தரப்பு தற்போது தகவல் தெரிவித்துள்ளது. தடுத்து நிறுத்தப்பட்ட விமானம் பாகிஸ்தானின் வான்வழியில் இருந்து வேறு வழியாக மடைமாற்றம் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் நடந்தபோது, ஸ்பைஸ்ஜெட் விமானத்தை எப் 16 ரக போர் விமானம் மூலம் பாகிஸ்தான் விமானப்படை சுற்றி வளைத்தார்களாம். ஸ்பைஸ்ஜெட் விமானிகள், தாங்கள் பயணிகள் விமானத்தை ஓட்டிச் செல்கிறோம் என்று சொன்ன பிறகும் விமானப் படையினர், ஆப்கன் வான்வழியை அடையும் வரை கூடவே வந்தார்களாம்.
இதுவரை ஸ்பெஸ்ஜெட் நிறுவனம், இந்த சம்பவம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி, பாலகோட் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை எல்லைத் தாண்டி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பாகிஸ்தான் விமானப் படை, அவர்களின் வான்வழியை இந்தியாவுக்கு மூடிவிட்டனர். இந்த நடவடிக்கையால் பாகிஸ்தானுக்கு சுமார் 50 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்தி பயணிக்க அந்நாட்டு அரசு அனுமதி மறுத்தது.
ஜம்மூ காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்த நடவடிக்கைக்கு எதிராகத்தான் பாகிஸ்தான் இப்படிபட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.