ஓடோஸ்கோபி செய்தபோதுதான், காதுக்குள் ஒரு சிலந்தி உயிரோடு இருந்தது தெரிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்கள்
ஒரு வயதான பெண்ணின் காதுக்குள் சென்று கூடு கட்டிய சிலந்தி குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. சீனாவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், சிலந்தியை காதிலிருந்து வெளியில் எடுக்கும் போதுதான் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் டெய்லி ஸ்டார் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி, சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில், வயதான பெண் ஒருவர், மியான்யாங் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். மருத்துவரிடம், காதில் அதீத வலி இருப்பதாகவும், அரிப்பதாகவும், ஒரு வித சத்தம் கேட்பதாகவும் அவர் சொல்லியிருக்கிறார்.
புகார்களைக் கேட்ட மருத்துவர், காதை சோதனையிட்டுள்ளார். பஞ்சு போன்ற ஒரு பொருளை அவர் காதிலிருந்து எடுத்துள்ளார். தொடர்ந்து காதுக்குள் சோதனை செய்யும் ஓடோஸ்கோபி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஓடோஸ்கோபி செய்தபோதுதான், காதுக்குள் ஒரு சிலந்தி உயிரோடு இருந்தது தெரிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்கள். அந்த சிலந்தி காதுக்குள் சிலந்தி வலை கட்டியிருப்பதும் தெரியவந்துள்ளது.
பின்னர், ரசாயனங்கள் மூலம் சிலந்தியை மயக்கமுறச் செய்த மருத்துவர், மூதாட்டியின் காதுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அனைத்தையும் வெளியே எடுத்துள்ளார்.
இது குறித்தான வீடியோவில், சிலந்தி, வலைக்குப் பின்னால் இருந்து வெளியில் வருவது தெரிகிறது. சீன சமூக வலைதளங்களில் இந்த வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. வீடியோவைப் பார்க்க:
பெண்ணிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் லியூ, “சிலந்தி சிறியதாக இருந்ததால் பெண்ணின் காதிற்கு எந்த ஆபத்தும் வரவில்லை. இல்லையென்றால் அவரின் கேட்கும் திறன் போயிருக்கும்,” என்று எச்சரிக்கிறார்.
இதைப் போன்று சிலந்தி, காதில் கூடு கட்டி வாழும் சம்பவங்கள் ஒன்றும் புதியதல்ல. இதைப் போன்றே அமெரிக்காவின் மிஸ்ஸவ்ரி பகுதியில் பெண்ணின் காதுக்குள் விஷச் சிலந்தி ஒன்று கூடு கட்டி வாழ்ந்த சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் தெரியவந்தது.
Click for more
trending news