Kerala: கேரளா: கடந்த நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு கேரள மாநிலத்தில் கனமழை பெய்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
வெள்ள பாதிப்புகளில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பும் பணியில் மக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வழக்கமாக உற்சாகமாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை களையிழந்து காணப்பட்டது. மேலும், இந்த ஆண்டு நடைப்பெற இருந்த ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களுக்கான 30 கோடி ரூபாய் நிதி, முதலமைச்சர் பேரிடர் நிவாரணத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார்.
கேரளா அனாச்சல் பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோவிலில், ஓணம் பண்டிகை களைகட்டுவது வழக்கம். ஆனால், ஓணம் பண்டிகைக்காக செய்யப்படும் அலங்காரங்கள் இந்த ஆண்டு தவிர்க்கப்பட்டுள்ளது.
இடமாற்றம் செய்யப்பட்டுள்ள கேரள மக்கள், நிவாரண முகாம்களிலேயே ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். “வெள்ள பாதிப்பில் சேதமடைந்துள்ள வீட்டிற்கு எங்களால் இப்போதைக்கு செல்ல இயலாது. நிவாரண முகாம்களிலேயே சிறிய அளவிலான ஓணம் கொண்டாட்டத்தினை முன்னேடுத்தோம்” என்று ஆலப்புழா நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்
மாநிலத்தின் பல்வேறு முகாம்களிலும், ஓணம் பண்டிகை பூக்கோளம் காணப்பட்டது. நிவாரண முகாம்களிலேயே மக்கள் ஓணம் பண்டிகையின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு எழும் கேரள மக்களுக்கு நாட்டின் முக்கிய தலைவர்கள் ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்