கைதானவர்கள் போலீஸ் கஸ்டடியில் வைக்கப்பட்டுள்ளனர்.
New Delhi: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தனர் என்ற குற்றச்சாட்டின்பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சிக்காமல் இருப்பதற்காக வாட்சப் மூலம் பாகிஸ்தான் அதிகாரிகளை தொடர்பு கொண்டது தெரிய வந்துள்ளது.
அரியானா மாநிலம் ஹிசாரில் ராணுவ குடியிருப்பு பகுதியில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றனர். இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தொழிலாளிகளாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தொழிலாளிகளில் சிலர் ராணுவ முகாம்களை உளவு பார்த்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராணுவத்தினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் 3 பேர் சந்தேகப்படும் நிலையில் இருந்தனர். அவர்கள் உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகரை சேர்ந்த மஹ்தப், சாம்லி, ரகிப் ஆகியோர் என்பது தெரியவந்தது. 3 பேரை தொடர்ந்து விசாரணை செய்ததில், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சாதாரண நெட்வொர்க் மொபைலில் பேசினால் கண்டுபிடிக்கப்பட்டு விடுவோம் என்பதால் வாட்சப் கால் மூலம் பாகிஸ்தான் அதிகாரிகளை தொடர்பு கொண்டு மூவரும் பேசியுள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுதொடர்பாக ஹிசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேறு எந்த மாதிரியான தகவல்களை மூவரும் பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளனர் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.