Bomb Blast in Sri Lanka: குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக இதுவரை ஆறுபது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
New Delhi: இலங்கையில்(Sri Lanka) ஈஸ்டர் தினத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இலங்கைக்கு இந்தியா ஆவணங்களுடன் எச்சரிக்கை விடுத்திருந்துள்ளது. மேலும், தாக்குதலை நடத்த உள்ள அமைப்பு, அமைப்பைச் சேர்ந்தவர்களின் பெயர்கள், முகவரிகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இந்திய உளவுத்துறை இலங்கைக்கு (Sri Lanka) வழங்கியுள்ளது.
ஈஸ்டர் பண்டிகையின்போது இலங்கையில் (Sri Lanka) 3 தேவாலயங்கள், 3 நட்சத்திர ஓட்டல்கள் உட்பட 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இதில் 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக இந்திய அளித்த 3 பக்க தகவலில், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதும் அவர்களின் பெயர்கள், முகவரிகள், தொலைபேசி எண்கள் உள்ளிட்ட தகவல்களையும் அளித்துள்ளது.
மேலும், இலங்கையின் சர்ச்சுகள், இந்திய தூதரகம் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என இந்தியா கடந்த ஏப்.11 தேதி எச்சரிக்கை விடுத்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்தியா முன்கூட்டியே எச்சரிக்கை செய்ததாகவும், தாங்கள் போதிய கவனம் இல்லாமல் இருந்து விட்டதாகவும் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
மேலும், இந்தியா எங்களுக்கு சில உளவுத்துறை தகவல்களை அளித்தது. ஆனால் நாங்கள்தான் சற்று கவனம் இல்லாமல் இருந்து விட்டோம். சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் உளவுத்துறையுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம்.
வெளிநாட்டு சதி ஏதேனும் உள்ளதா என்பது குறித்து வெளிநாட்டு நிறுவனங்களிடம் நாங்கள் உதவி கேட்டுள்ளோம். கடந்த மாதம் நியூசிலாந்தில் மசூதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு பதிலடியாக இலங்கையில் சர்ச்சுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கருதுகிறோம்.
தொடர் குண்டுவெடிப்பால் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டிருந்தாலும், இதில் இருந்து இலங்கை மீண்டு வரும். இதேபோன்று எகிப்து, பாலியிலும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்திருக்கின்றன என்று அவர் கூறியுள்ளார்.