குண்டுவெடிப்பு தொடர்பான சிசிடிவி காட்சிகள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. இதன் மூலம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
ஹைலைட்ஸ்
- சர்ச்சில் குண்டுவெடிப்பு நடந்தது தொடர்பாக சிசிடிவி காட்சி வெளியீடு
- புனித செபாஸ்டியன் சர்ச்சில் தாக்குதலுக்கு சற்று முன்பாக பதிவான காட்சி
- பேக் பேக் அணிந்து செல்லும் நபர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
Negombo, Sri Lanka: இலங்கை தொடர் குண்டுவெடிப்பின் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இதில் பேக் பேக் அணிந்து கொண்டு சந்தேகப்படும் படியான நபர் ஒருவர் சர்ச்சுக்குள் செல்கிறார். நிகோம்போவில் உள்ள சர்ச்சில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
அவர் வைத்திருக்கும் பேக் பேக்கில் வெடிகுண்டுகள் இருந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வீடியோவை இலங்கையை சேர்ந்த உள்ளூர் செய்தி சேனல் ஒன்று வெளியிட்டுள்ளது.
சிறுமி ஒருவரை அழைத்துக் கொண்டு ஒருவர் வந்து கொண்டிருக்கிறார். அப்போது பேக் பேக் அணிந்த ஒல்லியான தாடி வைத்த நபர் நடந்து வருகிறார். சிறுமி குறுக்கிடும் அவரது தலையில் கை வைத்து தட்டிக்கொடுக்கும் மர்ம நபர் தொடர்ந்து நடையை கட்டுகிறார்.
பின்னர் அவர் சர்ச்சுக்குள் நுழைகிறார். அவர்தான் இந்த தாக்குதலை நடத்தியிருக்க கூடும் என்று சந்தேகம் எழுந்திருக்கிறது. அந்த நபர்அரைக் கைச் சட்டையும், கருப்பு பேன்ட்டும் அணிந்திருக்கிறார். வீடியோவை பார்க்கும்போது பேக்பேக்கில் அதிக எடை கொண்ட பொருள் இருந்திருக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
கடைசியாக அந்த மர்ம நபர், பிரார்த்தனைக் கூடத்திற்கு உள்ளே நுழையும் காட்சியுடன் வீடியோ முடிகிறது. ''அவர் 30 வயது மதிக்கத்தக்க நபராக இருக்கலாம். பார்ப்பதற்கு அப்பாவி போன்ற தோற்றம் கொண்டவராக இருந்தார். செல்லும் வழியில் அவர் எனது பேத்தியின் தலையை தொட்டு விட்டு சென்றார். மிகவும் அமைதியாக அவர் காணப்பட்டார்'' என்று இந்த சம்பவத்தை நேரில் பார்த்த திலீப் பெர்னான்டோ என்பவர் தெரிவித்துள்ளார்.
மற்ற இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களை விட புனித செபாஸ்டியன் தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பில்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இங்கு மட்டும் சுமார் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள்.
உயிரிழந்தவர்களில் 27 பேர் குழந்தைகள் என்று யூனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்கொலைப்படை தீவிரவாதிகள் கொழும்புவின் மிகவும் பிரபலாமான, வெளிநாட்டவர் வந்து செல்லும் சின்னமான் கிராண்ட், தி ஷாங்ரி லா, தி கிங்ஸ்பரி ஆகிய 3 ஓட்டல்கள் மீதும், 3 சர்ச்சுகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தொடக்கத்தில் இந்த சம்பவத்திற்கு இலங்கையில் செயல்பட்டு வரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பே காரணம் என்று தகவல்கள் வெளியானது. பின்னர் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டது.
கடந்த மாதம் நியூசிலாந்தில் 2 மசூதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நடந்ததாக ஐ.எஸ். தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
(With inputs from AFP)