இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களும் இலங்கை தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
New Delhi: இலங்கையில் நேற்று முதல் 8 இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்துள்ளன. இந்த கோர சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 300-யை எட்டியுள்ளது. நூற்றுக்கணக்கானோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இலங்கையில் விடுதலை புலிகளுக்கு எதிராக உள்நாட்டு சண்டை முடிவுக்கு வந்த பின்னர், அங்கு நடந்திருக்கும் மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இலங்கையை சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் இந்த சம்பவத்தை நடத்தியிருக்க கூடும் என நம்பப்படுகிறது.
உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பகிர்ந்து மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று மக்களை அதிபர் மைத்ரிபால சிறிசேனா கேட்டுக் கொண்டுள்ளார்.
சர்ச்சுகள் புதுப்பித்து தரப்படும்!
வெடிகுண்டு தாக்குதலின்போது சேதம் அடைந்த சர்ச்சுகள் புதுப்பித்து தரப்படும் என இலங்கை அரசு உறுதி அளித்திருக்கிறது.
கடலோர பகுதியில் அலெர்ட்
இலங்கை தாக்குதலை தொடர்ந்து இந்திய கடலோர பகுதியில் அலெர்ட் செய்யப்பட்டு பாதுகாப்பு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இலங்கையில் தாக்குதல் நடத்தியவர்கள் இங்கு தாக்குதலை நடத்த வாய்ப்பிருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசாரணையில் இறங்கிய இன்டர்போல்
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு இன்டர்போல் தனது அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பி உள்ளது. தேவைப்பட்டால் தொழில்நுட்ப உதவி செய்து தருவதாக இன்டர்போல் தெரிவித்திருக்கிறது.
இழப்பீடு அறிவிப்பு
குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இலங்கை அரசு இழப்பீடு அறிவித்துள்ளது. இலங்கை மதிப்பில் ரூ. 1 லட்சம் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் என அரசு கூறியுள்ளது.
தாக்குதலுக்கு யார் காரணம்?
இலங்கையில் நடந்த தாக்குதலுக்கு உள்ளூரை சேர்ந்த இந்திய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பே காரணம் என்று நம்பப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த 11-ம்தேதி இலங்கை போலீஸ் தலைவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தூதரகம் மற்றும் சர்ச்சுகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக வெளிநாட்டு உளவு அமைப்புகள் கூறியுள்ளன.