பாதுகாப்புப் படையைச் சேர்ந்த யாருக்கும் இந்த சம்பவத்தின் போது பாதிப்பு ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
Colombo: கிழக்கு இலங்கையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படும் 4 பேரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
கால்முனாய் என்ற டவுனில் சோதனையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படை மீது, மர்ம கும்பல் ஒன்று திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில்தான் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து இலங்கை போலீஸ் தரப்பு கூறுகையில், ‘தற்கொலைப்படை தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் 4 தீவிரவாதிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பொது மக்களில் ஒருவரும் இறந்துள்ளார். 3 பேர் காயங்களுடன் தப்பிச் சென்றிருக்கலாம் என நினைக்கிறோம்' என்று தெரிவித்துள்ளது.
இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்குத் தொடர்புடையவர்கள் கால்முனாய் பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்று துப்பு கிடைத்தது அடுத்து, அந்நாட்டு ராணுவம் மற்றும் போலீஸ் இணைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளது. அந்தச் சோதனையின் போதுதான் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.
பாதுகாப்புப் படையைச் சேர்ந்த யாருக்கும் இந்த சம்பவத்தின் போது பாதிப்பு ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, அதற்கு பொறுப்பேற்று வீடியோ வெளியிட்டிருந்தது. அந்த வீடியோ நேற்று சோதனை செய்த இடத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பு சந்தேகப்படுகிறது. ‘வீடியோ எடுத்த இடத்தை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம்' என்று போலீஸ் தரப்பு நேற்று கூறியது குறிப்பிடத்தக்கது.
தொடர் குண்டுவெடிப்பை அடுத்து, இலங்கையின் ராணுவம் மற்றும் போலீஸ், தீவிரவாதிகளை தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.