இலங்கை குண்டுவெடிப்பில் இந்தியாவை சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
New Delhi: 300-க்கும் அதிகமானோரை பலிகொண்ட இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. இந்த தகவலை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இலங்கையை சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு தீவிரவாத தாக்குதலுக்கு காரணம் என கூறப்பட்டு வந்த நிலையில் ஐ.எஸ். அமைப்பு இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ளது.
குண்டுவெடிப்பு சம்பவங்களை பார்க்கும்போது அது, ஐ.எஸ். தீவிரவாதிகளின் வேலையாகத்தான் இருக்கும் என அமெரிக்க உளவுத்துறை சந்தேகம் தெரிவித்தது.
இலங்கையில் நேற்றுமுன்தினம் முதல் 8 இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்துள்ளன. காலை 8.45-க்கு மேற்கு கடற்கரை பகுதி நகரமான நிகோம்போவில் புனித செபாஸ்டியன், புனித அந்தோணி சர்ச்சுகளிலும், மட்டக்களப்பில் உள்ள இன்னொரு சர்ச்சிலும் வெடிகுண்டுகள் வெடித்தன.
இதேபோன்று தி ஷாங்ரி லா, தி சின்னமான் கிராண்ட், தி கிங்ஸ்பரி ஆகிய 3 ஃபைவ் ஸ்டார் ஓட்டல்களிலும் குண்டுவெடிப்பு நடந்தது.
இந்த கோர சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 300-யை தாண்டியுள்ளது. இவர்களில் 45-க்கு அதிகமானவர்கள் குழந்தைகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. 500-க்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இலங்கையில் விடுதலை புலிகளுக்கு எதிராக உள்நாட்டு சண்டை முடிவுக்கு வந்த பின்னர், அங்கு நடந்திருக்கும் மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.
இலங்கை தாக்குதலை தொடர்ந்து இந்திய கடலோர பகுதியில் அலெர்ட் செய்யப்பட்டு பாதுகாப்பு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இலங்கையில் தாக்குதல் நடத்தியவர்கள் இங்கு தாக்குதலை நடத்த வாய்ப்பிருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.