இலங்கை தொடர் குண்டுவெடிப்புகளுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
Colombo: தொடர் குண்டுவெடிப்புகளில் வெளிநாட்டவர் சதி இருக்கலாம் என தகவல்கள் வெளியானதை தொடர்ந்து 39 வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசாவை இலங்கை அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இதுகுறித்து இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் ஜான் அமரதுங்கா கூறுகையில், 'நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒரு சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். குறிப்பிட்ட 39 நாடுகளுக்கு இலங்கைக்கு வந்து விசா பெற்றுக் கொள்ளும் வசதி இருக்கிறது. இருப்பினும், தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு அதனை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்.
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக நடக்கப்பட்ட விசாரணையில் வெளிநாட்டின் சதி இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட 39 நாடுகளுக்கு அளித்து வந்த வசதி தவறாக பயன்படுத்தப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என்றார்.
நடப்பாண்டின் முதல் 3 மாதங்களில் மட்டும் 7.40 லட்சம் வெளிநாட்டினர் இலங்கைக்கு வந்துள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 4.5 லட்சம் இந்தியர்கள் இலங்கைக்கு சென்றுள்ளனர். நடப்பாண்டில் இந்த எண்ணிக்கை 10 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் தொடர் தாக்குதல் இலங்கையில் நடந்துள்ளது.
இதில் 139 பேருக்கு தொடர்பு இருப்பதாக அதிபர் மைத்ரிபால சிறிசேனா கூறியுள்ளார். குண்டுவெடிப்பை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் தற்கொலைப்படை தீவிரவாதிகளின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாட்டு அமைப்புகளும் இலங்கை தொடர் குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றன.