எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது ஆண்டு படித்து வரும் மாணவி, தோட்ட வேலை செய்யும் ஒருவரால் லிஃப்டில் வியாழனன்று மதியம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார்.
Chennai: சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். இதையடுத்து ஆயிரக்கணக்கான மாணவிகள், பல்கலைக்கழகத்துக்குள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது ஆண்டு படித்து வரும் மாணவி, தோட்ட வேலை செய்யும் ஒருவரால் லிஃப்டில் நேற்று மதியம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார்.
தோட்டக்காரர் லிஃப்டில் சென்று கொண்டிருந்த மாணவியிடம், சுய இன்பம் செய்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. 4வது மாடிக்கு செல்ல வேண்டிய அந்தப் பெண்ணை 8வது தளம் வரை, அவர் அழைத்துச் சென்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த பகீர் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு போராடத் தொடங்கியுள்ளனர் மாணவர்கள். மேலும் ஹாஸ்டல் கதவை உடைத்தும் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து பல்கலைக்கழக அதிகாரிகள், 'அந்த பெண்ணின் உடை குறைவாக இருந்ததே இப்படிப்பட்ட சம்பவம் நடக்க காரணம்' என்று குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு மாணவர்கள், 'இவர்கள் எந்த குற்றச்சாட்டையும் கண்டுகொள்வதில்லை. அதேபோல் இங்குள்ள வேலையாட்கள் மாணவர்களின் ப்ரைவஸியில் அதிகம் தலையிடுகிறார்கள்' என்று கூறியுள்ளனர்.
இந்தக் குற்றசாட்டை பல்கலைக்கழக துணைவேந்தர் மறுத்துள்ளார். 'மாணவர்கள் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் எங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். நாங்கள் பாதுகாப்பு கொடுப்போம்' என்று கூறியுள்ளார்.
ஹாஸ்டல் வார்டன், "சம்பவம் குறித்து தெரியவந்ததை அடுத்து, தோட்டக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்' என்று தெரிவித்துள்ளார். ஆனால் போலீஸ், "நாங்கள் எந்தப் புகாரையும் பெறவில்லை" என்று கூறியுள்ளது.
மேலும் போலீஸ் தரப்பு, 'சம்பவத்தில் தொடர்புடையவர் 38 வயது ஆண் துப்புறவு தொழிலாளர். லிஃப்ட்டை இயக்குவதில் அவருக்குப் பிரச்னை இருந்ததே தவிர வேறு எந்தப் பிரச்னையும் இல்லை. மேலும், மாணவர்கள் தேர்வைத் தள்ளிப்போடுவதற்காக போட்ட நாடகம் இது. மழைக் காரணமாக வெள்ளிக்கிழமைக்கு தேர்வுகள் மாற்றப்பட்டன. ஆனால், மாணவர்கள் ஏற்கெனவே ஊருக்கு செல்வதுக்கு டிக்கெட் புக் செய்துவிட்டதால் இதனை பிரச்சனையாக்கியுள்ளார்கள்' என்று கூறியுள்ளனர்.
இதற்கு மாணவர்கள் 'போலீஸ் சொல்வது பொய் , அவர்கள் நிர்வாகத்தை காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்' என்று கூறியுள்ளனர்.
(With inputs from PTI)