ஒவ்வொரு ஆண்டும், ஸ்டாலின் பிறந்தநாளை திமுக தொண்டர்கள், ‘இளைஞர் எழுச்சி நாள்’-ஆக கொண்டாடுவர்
ஹைலைட்ஸ்
- மார்ச் 1-ல் ஸ்டாலினின் பிறந்தநாள் வருகிறது
- சில நாட்களுக்கு முன்னரே, பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் என்றார் ஸ்டாலின்
- தற்போது மீண்டும் அது குறித்து பேசியுள்ளார்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மார்ச் 1 ஆம் தேதி வந்தால் வயது 66. ஒவ்வொரு ஆண்டும், அவரது பிறந்தநாளை திமுக தொண்டர்கள், ‘இளைஞர் எழுச்சி நாள்'-ஆக கொண்டாடுவர். இந்நிலையில், இந்த ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார் ஸ்டாலின்.
இது குறித்து ஸ்டாலின், ‘ஏற்கெனவே நாம் போற்றி வரும் நல்லுறவின் தொடர்ச்சியாக, தி.மு.கழகத்திற்கும் காங்கிரஸ் பேரியக்கத்திற்கும் தொகுதி உடன்பாடு ஏற்பட்ட பிறகு நடைபெற்ற ஊடகத்தினருடனான சந்திப்பின்போது, “உங்கள் பிறந்தநாளில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியாகுமா?” எனக் கேட்டார்கள். அப்போதே, “என் பிறந்தநாளைக் கொண்டாடும் மன உணர்வில் நான் இல்லை” என்பதைத் தெரிவித்தேன். மார்ச் 1ஆம் நாள் என்னுடைய பிறந்தநாள் என்றபோதும், நம்மை ஆளாக்கி - நெறிப்படுத்தி பொதுவாழ்வுப் பணியில் நல்வழிப்படுத்திய தலைவர் கலைஞர் அவர்கள் நம்முடன் இல்லாத நிலையில், பிறந்தநாளைக் கொண்டாடுவதில்லை என்பதே இப்போது என் எண்ணம்.
ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் முதல் நிகழ்வாக, தலைவரும் தந்தையுமான கலைஞர் அவர்களிடமும், அன்னையார் தயாளு அம்மையார் அவர்களிடமும் தாள் வணங்கி வாழ்த்துப் பெறுவது வழக்கம். இந்த ஆண்டு தலைவர் கலைஞர் அவர்களின் வாழ்த்துகளை நேரில் பெற முடியாதபடி, இயற்கையின் சதி அமைந்துவிட்ட நிலையில், பிறந்தநாள் நிகழ்வுகள் அவசியமற்றவை என்பதே என் முடிவு.
வழக்கமாக மார்ச் 1 அன்று நேரில் சந்தித்து வாழ்த்தும் கழகத்தின் மாநில –மாவட்ட – ஒன்றிய – பேரூர் – சிற்றூர் – துணை அமைப்புகளின் நிர்வாகிகள், இந்த முறை அதனைத் தவிர்க்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். பிறந்த நாள் விழா எனும் பெயரில் ஆடம்பர விழாக்களை நடத்துவதை கைவிட்டு, ஏழை - எளிய மக்கள் பயன்பெறும் வகையிலான நலத்திட்ட உதவிகளை இயன்றவரை வழங்கிட வேண்டுகிறேன். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் - என்றுரைத்த பேரறிஞர் அண்ணா வழி வந்தவர்கள் அல்லவா நாம்!
எல்லாவற்றுக்கும் மேலாக, திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தோழமைக் கட்சிகளும் இணைந்து அமைத்துள்ள வலிமையான கூட்டணி, எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு - புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும் வகையில், மாற்றாரும் மலைத்திடும் வண்ணம், இப்போதிருந்தே கண்ணயராமல் களப்பணியாற்றுவதே கழக உடன்பிறப்புகள் எனக்கு பிறந்தநாளில் உவந்து அளித்திடும் உயர்வான பரிசாகும். உன்னதமான அந்த உழைப்பு தரப்போகும் “நாற்பதுக்கு நாற்பது” என்ற வெற்றிக்கனியை, என்றும் நம் நெஞ்சில் நீங்காமல் நிறைந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் உயிர்த்துடிப்பான நினைவுகளுக்கு பணிவோடு காணிக்கையாக்குவோம்!' என்று கோரியுள்ளார்.