மு.க.ஸ்டாலின், ‘வருமான வரித் துறையினருக்குத் துணிச்சல் இருந்தால், பிரதமர் நரேந்திர மோடி வீட்டில் சோதனை செய்ய முடியுமா’ என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
Coimbatore: நாடாளுமன்றத் தேர்தல் வர இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் அனல் பறக்கப் பிரசாரம் செய்து வருகின்றன. கோயம்புத்தூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘வருமான வரித் துறையினருக்குத் துணிச்சல் இருந்தால், பிரதமர் நரேந்திர மோடி வீட்டில் சோதனை செய்ய முடியுமா' என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், ‘மோடியின் வீட்டில் கட்டுக் கட்டாக பல கோடி ரூபாய் மதிப்பிலான பணம் பதுக்கப்பட்டிருக்கிறது. அது குறித்து கண்டறிய வருமான வரித் துறையினர் மோடி வீட்டில் சோதனை செய்வார்களா.
அதேபோல, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் சோதனை நடத்துவார்களா.
துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடும் தேனி லோக்சபா தொகுதியில், கோடிக் கணக்கில் பணப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. அங்கே ரெய்டு நடத்த முடியுமா' என்றார்.
சமீபத்தில் திமுக பொருளாளர் துரைமுருகனின் காட்பாடி வீட்டிலும், அவது மகன் கதிர் ஆனந்துக்குச் சொந்தமான கல்லூரியிலும் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது. கதிர் ஆனந்த், இந்த முறை திமுக சார்பில் வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக-வுக்கு எதிராக நடத்தப்பட்ட ரெய்டால், ஸ்டாலின் கொதிப்படைந்துள்ளார். அதன் வெளிப்பாடகவே கோயம்புத்தூரில் ஐடி துறையினரை விமர்சனம் செய்தார்.