முன்னதாக, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட இரண்டு மசோதாக்களையும் மத்திய அரசு நிராகரித்துள்ளது. இந்த தகவலை உயர்நீதிமன்ற விசாரணையின் போது சமீபத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களை குடியரசு தலைவர் நிராகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ள விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த மன்றத்தில் மத்திய அரசின் நடவடிக்கை மூலம் தமிழக சட்டமன்றத்திற்கு இருந்த சட்டமியற்றும் அதிகாரம் பறிக்கப்பட்டிருக்கிறது. தமிழக சட்டமன்றத்தின் ஆணிவேரை சாய்த்து பார்க்கும் அளவில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. நீட் தேர்வு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றக் கூறிய மத்திய அரசு, இப்போது அந்த தீர்மானத்தையே நீர்த்துப் போக செய்துள்ளது.
நீட் விலக்கு மசோதாக்களை நிராகரித்த மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர், மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதாகவும் கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நீட் மசோதாக்களை நிராகரித்த மத்திய அரசைக் கண்டித்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர முடியாது. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது பற்றி பரிசீலித்து முடிவு செய்யப்படும் என்றார்.
இதைத்தொடர்ந்து, மத்திய அரசைக் கண்டித்து தீர்மானம் வேண்டாம் என்றால், மத்திய அரசை வலியுறுத்தியாவது தீர்மானம் போடுங்கள் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம், மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, தமிழக அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு சட்டத்தை மத்திய அரசு நிராகரித்ததற்கு மாநிலங்களவையில் அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நீட் நுழைவுத்தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். தமிழக நீட் சட்டத்தை மத்திய அரசு நிராகரித்தது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும் அவர் கூறியுள்ளார்.