This Article is From May 14, 2019

'பாஜகவுடன் கூட்டணி பேசவில்லை என்பதை ஸ்டாலின் நிரூபிக்கட்டும்' - தமிழிசை பதிலடி!!

திமுக தலைவர் ஸ்டாலின் - பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் இடையே எழுந்துள்ள கருத்து மோதல் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'பாஜகவுடன் கூட்டணி பேசவில்லை என்பதை ஸ்டாலின் நிரூபிக்கட்டும்' - தமிழிசை பதிலடி!!

பாஜகவுடன் கூட்டணி பேசியதை நிரூபிக்காவிட்டால் தமிழிசை அரசியலை விட்டு விலக வேண்டும் என ஸ்டாலின் கூறியிருந்தார்.

பாஜகவுடன் கூட்டணி பேசவில்லை என்பதை ஸ்டாலின் நிரூபிக்க வேண்டும் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார். 

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், முடிவு வெளியாகும் நாளான மே 23 நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே ஸ்டாலினை, ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் ஆகியோர் சந்தித்து பேசினர். 

இந்த சந்திப்பு அரசியல் களத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. துணை பிரதமர் ஆகுவதற்கு அணி சேர்ப்பதற்காக சந்திர சேகர ராவ் வந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் ஸ்டாலின் காங்கிரசுக்கு ஆதரவு கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே, திமுக பொருளாளர் துரை முருகனை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசியுள்ளார்.

இதுதொடர்பாக பேட்டியளித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், பாஜகவுடன் ஸ்டாலின் கூட்டணி பேசி வருவதாக கூறியிருந்தார். இதனால் கொதித்தெழுந்த ஸ்டாலின் தமிழிசையை கண்டித்து 2 பக்க அறிக்கையை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அதில் பாஜகவுடன் கூட்டணி பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார் என்று கூறியிருந்த ஸ்டாலின், நிரூபிக்கத் தவறினால் மோடியும், தமிழிசையும் அரசியலை விட்டு விலகுவார்களா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழிசை பேட்டி அளித்துள்ளார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது- 

நான் எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் பாஜகவுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறினேன். நான் வந்திருக்கும் அரசியல் பாரம்பரியம் பொய் சொல்லாத, ஊழல் செய்யாத, நேர்மையான அரசியல் பாரம்பரியம்.

அதனால் என்னுடைய அரசியல் வாழ்க்கை என்றுமே நேர்மையானததுதான். ஸ்டாலின் சொல்கிறார் என்பதற்காக இன்றைக்கே நான் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் எப்போது வேண்டுமானாலும் நிரூபிப்பேன். அரசியலில் எந்தக் கால கட்டத்தில் நிரூபிக்க வேண்டுமோ அந்தக் கால கட்டத்தில் நான் நிரூபிப்பேன். 

நான் சொல்வதில் எப்போதுமே உண்மை இல்லாமல் இருக்காது. கலைஞரின் மகன் அதிக நாள் அரசியலில் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களின் ஆசை. எங்களை அரசியலை விட்டு விலகச் சொல்லும் உரிமை ஸ்டாலினுக்கு இல்லை. பாஜகவுடன் கூட்டணி பேசவில்லை என்பதை ஸ்டாலின் நிரூபிக்கட்டும். 

இவ்வாறு தமிழிசை சவுந்தர ராஜன் கூறினார். 

.