This Article is From May 14, 2019

“பாஜக-வுடன் ஸ்டாலின் பேச்சுவார்த்தையில் இருக்கிறார்!”- புது ரூட் போடும் தமிழிசை

நேற்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஸ்டாலினை சென்னையில் சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்

“பாஜக-வுடன் ஸ்டாலின் பேச்சுவார்த்தையில் இருக்கிறார்!”- புது ரூட் போடும் தமிழிசை

இன்று கே.சி.ஆர் உடனான சந்திப்பு குறித்து விளக்கமாக பேசியுள்ளார் மு.க.ஸ்டாலின்

காங்கிரஸுடன் கூட்டணி, சந்திரசேகர் ராவுடன் மூன்றாவது அணி குறித்த பேச்சுவார்த்தை என தமிழக அரசியல் களத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் பாஜக-வின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், “மு.க.ஸ்டாலின் பாஜக-வுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று சொல்லப்படும் தகவல் உண்மைதான்” என்று பகீர் கிளப்பும் கருத்தை கூறி அதிர வைத்திருக்கிறார். 

நேற்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஸ்டாலினை சென்னையில் சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இருவரது சந்திப்புக்குப் பிறகு ராவ், செய்தியாளர்களை சந்திக்காமல் ஜூட் விட்டார். ஆனால் ஸ்டாலின், “சந்திரசேகர் ராவ் என்னை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்” என்று முடித்துக் கொண்டார்.

இந்நிலையில் இன்று கே.சி.ஆர் உடனான சந்திப்பு குறித்து விளக்கமாக பேசிய ஸ்டாலின், “சந்திரசேகர் ராவ் 3வது அணி அமைப்பதற்காக என்னை சந்திக்க வரவில்லை. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். 3-ஆம் அணிக்கான வாய்ப்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இருப்பினும் அணி அமையுமா என்பது மே 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகே முடிவு செய்யப்படும்” என்று சூசகமாக பதில் சொன்னார்.

சந்திரசேர ராவ் சந்திப்பு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தமிழிசை கூறியது குறித்து கேள்வி எழுப்பிய போது, “அவருக்கு இந்த சந்திப்பு தாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது” என்று ஸ்டாலின் கவுன்ட்டர் அடித்தார். 

இப்படி சந்திரசேகர் ராவ் - ஸ்டாலின் சந்திப்பு, தமிழக அரசியல் களத்தில் பேசு பொருளாகவே மாறியுள்ள நிலையில் இன்று மீண்டும் ஒரு குண்டை தூக்கிப் போட்டுள்ளார் தமிழிசை. “அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டாலின், பாஜக-வுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார் என்று சொல்லியிருக்கிறார். அது உண்மைதான். மே 23 ஆம் தேதிக்குப் பிறகும் மோடி ஆட்சிதான் தொடரும் என்று பல கருத்துக் கணிப்புகளும் தெரிவித்து வருகின்றன. அதனால், பாஜக-வுடனும் பேச்சுவார்த்தையில் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். 

ஒரு பக்கம் ராகுல்தான் பிரதமர் என்று பேசி வருவது. இன்னொரு பக்கம் சந்திரசேகர் ராவுடன் மூன்றாவது அணியிலும் துண்டு போடுவது. மறுபக்கம் பாஜக-வுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது. இதுதான் திமுக-வின் உண்மை நிலை. எப்போதும் நிறம் மாறும் கட்சிதானே திமுக” என்று நக்கலடித்துள்ளார் தமிழிசை. அதே நேரத்தில் யாரிடம் அல்லது யார் மூலமாக பாஜக-வுடன் ஸ்டாலின் தூதுவிட்டு வருகிறார் என்பது குறித்து எந்தத் தகவலையும் சொல்லவில்லை தமிழிசை. மே 23 ஆம் தேதிக்குப் பிறகு கூட்டணிக் காட்சிகளும், அரசியல் காய் நகர்த்தல்களும் மாறும் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரக்கப்பட்டு வருகிறது. 

.