This Article is From Dec 09, 2018

ராகுல், சோனியாவுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

இந்த சந்திப்பின் போது மு.க.ஸ்டாலினுடன் கனிமொழி எம்பி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோரும் உடன் சென்றிருந்தனர்

ராகுல், சோனியாவுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கவும், மறைந்த திமுக முன்னாள் தலைவர் கலைஞர் சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பதற்காகவும் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லியில் ராகுல் மற்றும் சோனியாவை நேரில் சந்தித்தார்.

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா வருகிற 16-ந்தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்று கலைஞரின் சிலையை திறந்து வைக்கிறார்.

இந்த விழாவிற்கான அழைப்பிதழை சோனியா காந்தியிடம் நேரில் வழங்குவதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டெல்லி சென்றார். சோனியா காந்திக்கு இன்று பிறந்த நாள் என்பதால் பூங்கொத்து கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து கலைஞரின் சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை வழங்கி விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின் போது மு.க.ஸ்டாலினுடன் கனிமொழி எம்பி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோரும் உடன் சென்றிருந்தனர்.

இந்த சந்திப்பின் போது சோனியாவுடன் மு.க.ஸ்டாலின் சிறிது நேரம் பேசினார். அப்போது, மேகதாது அணை விவகாரம் குறித்தும், நாளை நடைபெற உள்ள எதிர்கட்சி தலைவர்கள் கூட்டம் குறித்தும் கலந்து ஆலோசித்தனர்.

இந்த சந்திப்பு குறித்து ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில், சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழத்து தெரிவிக்க ஸ்டாலின் மற்றும் திமுக மூத்த உறுப்பினர்கள் இன்று டெல்லி வருகை தந்தனர். இந்த சந்திப்பின்போது பல்வேறு பிரச்சனைகள் குறித்து கலந்து ஆலோசித்தோம்.

எங்கள் உரையாடலை தொடரவும், கூட்டணியை வலுப்படுத்தவும் எதிர்நோக்குகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், சந்திப்பு குறித்து புகைப்படங்களையும் அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வியூகம் அமைப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இந்தக் கூட்டத்திலும் ஸ்டாலின் நாளை பங்கேற்க உள்ளார்.


 

.