This Article is From Jun 19, 2018

பேனர் கலாசாரத்துக்கு முடிவுகட்டும் ஸ்டாலின்… திமுக தொண்டர்களுக்கு வேண்டுகோள்!

தமிழகத்தின் எதிர்கட்சியான திமுக, பேனர் கலாசாரத்துக்கு முடிவுகட்டும வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பேனர் கலாசாரத்துக்கு முடிவுகட்டும் ஸ்டாலின்… திமுக தொண்டர்களுக்கு வேண்டுகோள்!

ஹைலைட்ஸ்

  • செயல் தலைவர் ஸ்டாலின் அறிவுரையின் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது
  • அண்ணா நகரில் நடந்த திமுக நிகழ்ச்சியில் அதிக பேனர்கள் வைக்கப்பட்டது
  • அண்ணா நகரில் கருணாநிதி பிறந்தநாள் விழா நடத்தப்பட்டது
தமிழகத்தின் எதிர்கட்சியான திமுக, பேனர் கலாசாரத்துக்கு முடிவுகட்டும வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா சென்னை, அண்ணா நகரில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக-வின் செயல் தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி, திமுக தொண்டர்கள் அண்ணா நகர் பகுதியின் நிறைய இடங்களில் பேனர் மற்றும் கட்-அவுட்களை வைத்திருந்தனர். இதில் பல பேனர்கள் பொது மக்களுக்கு இடையூறாக இருந்தது. இந்த விஷயம் அக்கட்சியின் செயல் தலைவரின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 

இதையொட்டி திமுக-வின் தலைமைக் கழகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ‘திமுக நிகழ்ச்சிகளுக்கு பேனர்கள், கட்-அவுட்கள், டிஜிட்டல் விளம்பரங்கள் பொது மக்களுக்கு எந்தவித இடையூரையும் ஏற்படுத்தக் கூடாது என்றும், பொதுச் சொத்துக்குச் சேதாரம் விளைவிக்கக் கூடாது என்றும் கழகச் செயல் தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்ற போதே கழக நிர்வாகிகள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. இருந்தும் சிலர் தொடர்ந்து இதைப் போன்ற பேனர் விளம்பரங்களை வைத்து வருகின்றனர். அண்மையில் அண்ணா நகரில் நடந்த திமுக கூட்டத்தில் இந்த செயல் குறித்து வெளிவந்த செய்திகள் வாயிலாக தெரிய வந்தது. 

இந்தச் செயலைப் பற்றி அறிந்தவுடன் கழக செயல் தலைவர் ஸ்டாலின், சம்பந்தப்பட்ட நிர்வாகிகளை அழைத்து பொது மக்களுக்கு தொந்தரவாக இருக்கும் பேனர்களை உடனடியாக நீக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும், இச்செயல்களால் பாதிக்கப்பட்ட நடைபாதைகளை உடனடியாக சரி செய்து தரும்படியும் கூறினார்.

எனவே, கழக நிகழ்ச்சிகளுக்கு அளவின்றி பேனர்களை வைப்பதை நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும். கழக நிகழ்ச்சிகள் குறித்து முக்கியமான ஓரிரு இடங்களில் மட்டும் விளம்பரப்படுத்தினால் போதும். இந்த அறிவிப்பை மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு கழக நிர்வாகிகளை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்ளப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
.