This Article is From Nov 12, 2018

‘பெரியாருக்கு சாதிப் பட்டம் சூட்டுவதா?’- ‘க்ரூப் 2’ விவகாரத்தில் கொதிக்கும் ஸ்டாலின்

‘க்ரூப் 2’ தேர்வு நேற்று மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடந்தது. பல்லாயிரக்கணக்கானோர் இந்தத் தேர்வை எழுதினர்

‘பெரியாருக்கு சாதிப் பட்டம் சூட்டுவதா?’- ‘க்ரூப் 2’ விவகாரத்தில் கொதிக்கும் ஸ்டாலின்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ‘க்ரூப் 2' தேர்வு நேற்று மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடந்தது. பல்லாயிரக்கணக்கானோர் இந்தத் தேர்வை எழுதினர். அந்தத் தேர்வில் கேட்கப்பட்ட பெரியார் குறித்தான கேள்வி சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொதித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து அவர் முகநூலில், ‘தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வு வினாத்தாளைத் தயாரித்தவர்கள் எத்தகைய சாதி வன்மம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார் என்ற கேள்விக்கு இ.வெ. ராமசாமி நாயக்கர், காந்திஜி, இராஜாஜி, சி.என். அண்ணாதுரை என்பதில் எது சரியான பதில் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. கேள்வியைத் தயாரித்தவர், சரி பார்த்தவர், மேற்பார்வை செய்த ஆணையத்தின் அதிகாரம் படைத்தவர்களுக்கு முதலில் ஆங்கிலம் தெரியுமா, தமிழ்நாடு தெரியுமா எனத் தெரியவில்லை.

3o351s58

ஈரோடு வெங்கடப்ப ராமசாமி என்பதுதான் சுருக்கமாக ஈ.வெ.ரா. அதுகூடத் தெரியாமல், 'இ' என்று பிழையாகப் போட்டுள்ளார்கள். கேள்வியைத் தயாரித்தவருக்கு ஈரோடு கூட தெரிந்திருக்கவில்லை. இப்படிப்பட்ட நபர்களிடம் கேள்வி தயாரிக்கச் சொன்னால், தந்தை பெரியாருக்கு சாதிப்பட்டம் போடத்தானே செய்வார்கள்!

இன்றிலிருந்து 90 ஆண்டுகளுக்கு முன்னால், அதாவது 1928ம் ஆண்டிலேயே தனது பெயரில் சாதி ஒட்டியிருந்ததை நீக்கியவர் தந்தை பெரியார். யாரும் சாதிப்பட்டம் போடக்கூடாது என்றவர் அவர். சாதிப்பெருமை பேசக்கூடாது என்று, சாதி மாநாடுகளிலேயே துணிச்சலாகப் பேசியவர் அவர். எப்போதும் எல்லா நிலையிலும் ஒடுக்கப்பட்டோர் பக்கமே நின்றவர் அவர். அப்படிப்பட்ட பெரியாருக்கு சாதி அடையாளம் சூட்டுவதும், அதுவும் அரசுத் தேர்வில் அடையாளப்படுத்துவதும் அயோக்கியத்தனமானது மட்டுமல்ல; தேர்வு எழுதுவோரின் மனதில் பிற்போக்குத் தனமான எண்ணத்தை விதைப்பதுமாகும். இதற்கு, காரணமானவர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டும். தமிழக அரசு இந்த அடாத செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.

.