மேகதாது விஷயம் குறித்து விவாதிக்க தமிழக சட்டமன்றம் கூட்டப்பட வேண்டுமென்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், நாளை சட்டமன்றம் கூட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளர்.
ஸ்டாலின் இது குறித்து கூறுகையில், ‘எதிர்கட்சியின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு, சிறப்பு சட்டமன்றக் கூட்டம் கூட்டப்படுவது, வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த சிறப்பு சட்டமன்றக் கூட்டதில், அரசின் சார்பில் வைக்கப்படும் தீர்மானத்துக்கு எங்கள் கருத்துகளை உறுதியாக எடுத்து வைப்போம்' என்று பேசினார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா வெகு நாட்களாக முயன்று வருகிறது. இந்தத் திட்டத்துக்குத் தமிழக அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், திட்டத்துக்கான விரிவான ஆய்வறிக்கையைத் தயாரிக்க கர்நாடகாவுக்கு, மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.
இதற்கு தமிழக அரசும், எதிர்கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையொட்டி அனைத்து எதிர்க்கட்சிகள் சார்பிலும், திருச்சியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கண்டன பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது எதிர்க்கட்சிகள், ‘சட்டமன்றம் கூட்டப்பட்டு, மேகதாது விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்' என்று பேசின. இதையொட்டித் தான், தமிழக அரசு, சட்டமன்றத்தைக் கூட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் படிக்க : “ஒரே நேரத்தில் தமிழகம் முழுக்க கூட்டம் வருமா..?”- தினகரனுக்கு சவால்விடும் ஆவடிக்குமார்