India China Border: பன்கோங் ஏரி பகுதியில் இந்திய - சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல் போக்கு நிலவுவது முதல்முறையல்ல
New Delhi: லடாக்கில் (Ladakh) நேற்று இந்திய - சீன ராணுவத்துக்கு இடையே மோதல் போக்கு நிலவியது. இந்நிலையில், "தூதுவர் குழு அளவிலான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் மோதல் போக்கு முடிவடைந்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லடாக்கில் உள்ள பன்கோங் (Pangong Tso) ஏரி பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த சீன ராணுவத்தினர், ரோந்து பணியில் ஈடுபட்ட இந்திய ராணுவ வீரர்களிடம் மோதல் போக்கில் ஈடுபட்டனர்.
இது தங்கள் பகுதி என்றும் இங்கிருந்து வெளியேறும்படியும் இந்திய ராணுவத்தினருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. தங்கள் எல்லை பகுதியிலேயே இருப்பதாக, இந்திய ராணுவத்தினர் தெரிவித்தனர்.
இதனால் மோதல் போக்கு ஏற்பட்டது. தொடர்ந்து, நேற்று மாலை வரை இந்த மோதல் போக்கு நீடித்தது. பின்னர் பேச்சு வார்த்தை மூலம் பிரச்னைத் தீர்க்கப்பட்டுள்ளது.
திபெத்தில் இருந்து லடாக் வரை நீண்ட நீளமுள்ள ஏரியின் மூன்றில் இரண்டு பங்கு சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் அருகில் இருக்கும் பல பகுதிகளுக்கு இந்தியாவும், சீனாவும் உரிமை கோரி வருகின்றன.
இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள தகவலின் படி, பிரிகேடியர் தர அதிகாரிகள் தலைமையிலான பிரதிநிதிகள் அடங்கிய குழுவின் பேச்சுவார்த்தையை அடுத்து இருதரப்பு பதற்றம் தணிக்கப்பட்டது.
உண்மையான எல்லைக்கட்டுப்பாடு குறித்து மாறுபட்ட கருத்துகள் காரணமாக, இத்தகைய சம்பவங்கள் நடப்பதாகவும் அவை பெரும்பாலும் இதுபோன்ற பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படுவதாகவும் ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 2017-ல், இரு தரப்பு வீரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாக பரப்பப்பட்டது. அதில், இரு நாடுகளைச் சேர்ந்த பல வீரர்கள் ஒருவருக்கொருவர் குத்துவதும், உதைப்பதும் கற்களை வீசுவதுமாக இருந்தது.
சுதந்திர தினத்தன்று சீன ராணுவத்தினர் பாங்கோங் ஏரியின் கரையில் இந்திய நிலப்பரப்பில் நுழைய முயன்றபோது இந்த சம்பவம் நடந்தது, ஆனால் இந்திய வீரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.