காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் பிரசவத்தின்போது குழந்தையின் தலை துண்டான சம்பவம் குறித்து பதில் அளிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் கடலூர் என்ற கிராமத்தை சேர்ந்த பொம்மி என்பவர் தனது முதல் பிரசவத்திற்காக கூவத்தூர் அருகேயுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அதிகாலை நேரத்தின்போது, பொம்மிக்கு பிரசவ வலி அதிகம் இருந்ததாகவும், அப்போது மருத்துவர்கள் யாரும் இல்லை என்றும் தெரிகிறது. இதையடுத்து, அங்கிருந்த செவிலியர் முத்துக்குமாரி என்பவர் உதவியாளர் ஒருவரின் உதவியோடு பொம்மிக்கு பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், குழந்தை முழுவதுமாக வெளியே வராமல் தலை துண்டான நிலையில் குழந்தையின் உடல் வெளிவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பொம்மியை உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரது வயிற்றில் இருந்த சிசுவின் மற்றொரு பகுதி வெளியே எடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததே இந்த துயர சம்பவத்திற்கு காரணம் என்று உறவினர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பானதை தொடர்ந்து பொம்மிக்கு பிரசவம் பார்த்த செவிலியர் முத்துக்குமாரி தலைமறைவாகி உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ள மாநில மனித உரிமை ஆணையம் சுகாதாரத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் 6 வாரத்திற்குள் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.