This Article is From May 25, 2020

'உத்தப்பிரதேச மக்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது' - முதல்வர் அதிரடி

வெளி மாநிலங்களிலிருந்து தற்போது வரையில் உத்தரப்பிரதேசத்திற்கு சுமார் 20 லட்சம் பேர் திரும்பியுள்ளனர். மாநிலத்திற்கு கொரோனா பாதிப்புடன் திரும்புபவர்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் அவர்களது உடல்நிலை முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

'உத்தப்பிரதேச மக்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது' - முதல்வர் அதிரடி

உத்தரப்பிரதேசத்தில் 6,200 -க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Lucknow:

உத்தரப்பிரதேச மக்களை அரசின் அனுமதியின்றி மற்ற எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

கொரோனாவால் ஏற்பட்ட பொது முடக்கத்தால் வெளி மாநில தொழிலாளர்கள் தங்களது மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றிய உத்தரப்பிரதேச தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்புகின்றனர். இந்த நிலையில் வெளி மாநில தொழிலாளர்கள் விஷயத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி முடிவை அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்திருக்கும் பேட்டியில் கூறியிருப்பதாவது-

உத்தரப்பிரதேச தொழிலாளர்கள் மாநிலத்திற்குள் வேலை வாய்ப்பை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான உத்தரவை நான் அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ளேன். 

மற்ற மாநிலங்களுக்கு உத்தரப்பிரதேச தொழிலாளர்கள் தேவைப்பட்டால் அவர்கள் எங்களிடம் அனுமதி பெற வேண்டும். ஏனென்றால் எங்களது மாநில மக்கள் மிக மோசமாக நடத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கொரோனாவால் ஏற்பட்ட பொது முடக்கத்தால் வெளி மாநில தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல தொழில் நிறுவனங்கள் அவர்களுக்கு முறையான கூலியை வழங்கவில்லை என்று புகார் எழுந்திருக்கிறது. 

வெளி மாநிலங்களிலிருந்து தற்போது வரையில் உத்தரப்பிரதேசத்திற்கு சுமார் 20 லட்சம் பேர் திரும்பியுள்ளனர். மாநிலத்திற்கு கொரோனா பாதிப்புடன் திரும்புபவர்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் அவர்களது உடல்நிலை முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் 6,200 -க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் 3,500 க்கும் அதிகமானோர் குணம் அடைந்த நிலையில், 161 பேர் உயிரிழந்துள்ளனர். 

.