குடியுரிமை சட்டம் இந்தியாவைப் பிரித்துவிடும். நாங்கள் ஆட்சியில் இருக்கும் வரை ஒருவர் கூட இந்தியாவிலிருந்து வெளியே அனுப்பப்பட மாட்டார்கள்-Mamata Banerjee
New Delhi: Citizenship Act - மத்திய அரசு கொண்டு வரும் சட்டங்களை மாநில அரசு, தன் உரிமை கொண்டு தடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. தற்போது நடைமுறைக்கு வந்திருக்கும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்கள் எதிர் கருத்து சொல்லி வரும் நிலையில், இந்த விவகாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
“சட்ட சாசனத்தின் 7வது பிரிவுக்குக் கீழ், மத்திய அரசு இயற்றும் ஒரு சட்டத்தை மாநில அரசு தடுக்க முடியாது,” என்று உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் நம்மிடம் பகிர்ந்துள்ளார். மேலும் அவர், “ஒருவருக்குக் குடியுரிமை வழங்குவது மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்டது,” என்றுள்ளார்.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான மேற்கு வங்கம், கேரளா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் உள்ளிட்டவை, தங்கள் பகுதிகளில் குடியுரிமை சட்டம் அமல் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளன. அப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டும் குடியுரிமை கொடுக்கும் வகையில் இருக்கும் அந்தச் சட்டம் ‘சட்டசாசனத்துக்கு' எதிரானது என்றும் ‘பாகுபாடுகளை' ஊக்குவிக்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
நேற்று இரவு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த நிலையில், அது சட்டமாக அமலாகியுள்ளது. இந்தச் சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து வன்முறைப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. காவல் துறையினரின் துப்பாக்கிச்சூட்டால் அசாம் மாநிலத்தில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குடியுரிமை சட்டம் குறித்துப் பேசியுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “குடியுரிமை சட்டத்தை எக்காரணம் கொண்டும் எனது மாநிலத்தில் அமல் செய்ய விடமாட்டேன். பாஜக ஆளுகையில் இல்லாத மாநிலங்களில் சட்ட சாசனத்திற்கு எதிரான சட்டத்தை திணிக்கப் பார்க்கிறது மத்திய அரசு.
குடியுரிமை சட்டம் இந்தியாவைப் பிரித்துவிடும். நாங்கள் ஆட்சியில் இருக்கும் வரை ஒருவர் கூட இந்தியாவிலிருந்து வெளியே அனுப்பப்பட மாட்டார்கள்,” என்று கொதித்துள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயனோ, “இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும், மதம், சாதி, மொழி, கலாசாரம், பாலினம் அல்லது தொழில் ஆகியவற்றில் எந்தப் பாகுபாடும் காட்டமல் குடியுரிமை வழங்கியுள்ளது சட்ட சாசனம். குடியுரிமை சட்டம் மூலம் இந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது. மத அடிப்படையில் ஒருவருக்கு குடியுரிமை வழங்குவது சட்ட சாசனத்துக்கு எதிரானது,” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
“இந்த சட்டம் பாகுபாடு காட்டும் வகையில் வரையறுக்கப்பட்டுள்ளது. எந்த சட்டம் மக்களை மதம் சார்ந்து பிரிக்கப் பார்க்கிறதோ அது சட்டசாசனத்துக்குப் புறம்பானது,” என்று உறுதிபட தெரிவித்துள்ளார் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்.