கொல்கத்தாவில் நடைபெற்று வரும் கிழக்கு மண்டல கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றுள்ளார்.
Kolkata, West Bangal: மியான்மர் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தை தொடர்ந்து அங்கிருந்து ரோஹிங்ய பிரிவை சேர்ந்தவர்கள் பலர் இந்தியாவில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் மேற்கு வங்கத்தில் உள்ளனர். இந்த நிலையில், கிழக்கு மண்டலத்தில் உள்ள மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கிழக்கு மண்டல கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டுக்கு இடையே, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது- இந்தியாவில் உள்ள ரோஹிங்ய மக்களை அடையாளம் காண வேண்டும் என மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். பயோமெட்ரிக் முறையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த அறிக்கையை மாநில அரசுகள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதன்பின்னர் மியான்மரை தொடர்பு கொண்டு ரோஹிங்ய மக்களின் பிரச்னைக்கு மத்திய அரசு தீர்வு காணும் என்றார்.
முன்பு பேட்டியளித்த ராஜ்நாத்சிங், மியான்மரில் இருந்து வந்தவர்கள் அனைவரும் சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறியவர்கள் என்றும், அகதிகளுக்காக அவர்கள் மத்திய அரசிடம் விண்ணப்பிக்கவில்லை என்றும் கூறியிருந்தார். இதனை எதிர்க்கட்சிகள் அரசியலாக்க முயற்சிப்பதாகவும் அவர் விமர்சித்தருந்தார்.