மைகிரிப்டோ என்ற பிளாக் செயின் நிறுவன ஊழியர்கள், வழக்கமான மருத்துவக் காப்பீடுகளுக்கு பதிலாக ஸ்டெம் செல் முறைக்கான காப்பீட்டு உதவி வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர். அப்படித்தான் தாங்கள் ஃபாரெவர் லேப்ஸ் நிறுவனத்தை கண்டுபிடித்தோம் என்கிறார் மைகிரிப்டோவின் நிறுவனர் டெய்லர் மொனோஹன்.
அப்படி என்ன செய்கிறது ஃபாரெவர்லேப்ஸ். ஸ்டெம் செல்களை சேமித்து வைப்பது, நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும் என்கிறது அந்நிறுவனம். மேலும், ஆரோக்கியமான, இளம் செல்கள் ஒரு நாள், உயிரைக் காப்பாற்றப் பயன்படும் என்றும் கூறுகிறார் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி.
இந்த செல்கள் இதய நோய், அல்சைமர், பார்க்கின்சன்ஸ் போன்ற நோய்களில் இருந்து மீள உதவும் என்றும் அவர் கூறுகிறார். மனிதர்களின் வாழ்நாளை நீட்டிப்பதே எங்கள் நோக்கம் என்கிறார் அவர்.
உடலில் பல வகை ஸ்டெம் செல்கள் இருக்கின்றன. அதில் மெசென்கைமல் என்ற ஸ்டெம் செல்லை சேமித்து வைக்கிறது ஃபாரெவர் லேப்ஸ்.
மைகிரிப்டோ நிறுவன ஊழியர்களுக்கு இந்த ஸ்டெம் செல் சேமிப்பு முறைக்கு 2500 டாலர்கள் வசூலிக்கப்படுகின்றது. இது போக ஆண்டுக்கு 250 டாலர்கள் வசூலிக்கப்படுகிறது.