This Article is From Feb 07, 2019

ஸ்டெர்லைட் மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்து இருந்தது. கடந்த மாதம் இந்த வழக்கு, விசாரணைக்கு வந்தபோது தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி வழங்காதது தொடர்பாக தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், உடனடியாக மின்சாரம் வழங்க உத்தரவிட்டது.

அந்த வழக்கு விசாரணையின் போது, ஆலை விதிகளை மீறியதாக அரசு குற்றம்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு ஸ்டெர்லைட் வழக்கை விசாரிக்க அதிகாரம் உள்ளது எனவும் ஸ்டெர்லைட் தரப்பு வாதிட்டது.

மேலும் ஆலையால் சுற்றுச்சூழல் மாசு உள்ளதா என்பதை ஆராய குழு அமைக்கவும் பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் உள்ளது. சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாக அரசு குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது. ஆலையை மூட உத்தரவிடும் வரை எந்த நோட்டீசும் அரசு அனுப்பவில்லை என ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதனால் ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பிப்ரவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆலைக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜராகி வாதாடினார். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் பல நோய்கள் ஏற்படுவதாக வைகோ மீண்டும் குறிப்பிட்டார்.

இதனைத்தொடர்ந்து, இன்று பிற்பகல் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

.