ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்து இருந்தது. கடந்த மாதம் இந்த வழக்கு, விசாரணைக்கு வந்தபோது தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி வழங்காதது தொடர்பாக தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், உடனடியாக மின்சாரம் வழங்க உத்தரவிட்டது.
அந்த வழக்கு விசாரணையின் போது, ஆலை விதிகளை மீறியதாக அரசு குற்றம்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு ஸ்டெர்லைட் வழக்கை விசாரிக்க அதிகாரம் உள்ளது எனவும் ஸ்டெர்லைட் தரப்பு வாதிட்டது.
மேலும் ஆலையால் சுற்றுச்சூழல் மாசு உள்ளதா என்பதை ஆராய குழு அமைக்கவும் பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் உள்ளது. சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாக அரசு குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது. ஆலையை மூட உத்தரவிடும் வரை எந்த நோட்டீசும் அரசு அனுப்பவில்லை என ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதனால் ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் பிப்ரவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.