This Article is From Jan 24, 2019

“40 நிமிடங்கள் தரவேண்டும்”- வைகோவின் வாதத்தால் தடைபட்ட ஸ்டெர்லைட் திறப்பு!

மதிமுக பொதுச் செயலாளரும் வழக்கறிஞருமான வைகோ ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆஜரானார்.

“40 நிமிடங்கள் தரவேண்டும்”- வைகோவின் வாதத்தால் தடைபட்ட ஸ்டெர்லைட் திறப்பு!

நீதிமன்றத்தில் வைகோ எப்படி வாதாடி, வழக்கைத் தள்ளி வைத்தார் என்பது குறித்து அக்கட்சி சார்பில் முகநூலில் பதியப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • தமிழக அரசு, அரசாணை வெளியிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடியது
  • ஆலைக்கு எதிராக தொடர்ந்து மக்கள் போராடி வந்தனர்
  • 'ஆலை மீண்டும் திறக்கப்பட வாய்ப்பில்லை' - தமிழக அரசு

தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்திட அந்த ஆலைத் தரப்பு அனைத்து வித முயற்சிகளையும் எடுத்து வருகிறது. தற்போது ஆலை திறப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மதிமுக பொதுச் செயலாளரும் வழக்கறிஞருமான வைகோ ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆஜரானார். அவர் வாதாடும் திறமையால், இன்று உச்ச நீதிமன்றம் ஆலையைத் திறக்க அளிக்கவிருந்த உத்தரவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

நீதிமன்றத்தில் வைகோ எப்படி வாதாடி, வழக்கைத் தள்ளி வைத்தார் என்பது குறித்து அக்கட்சி சார்பில் முகநூலில் பதியப்பட்டுள்ளது. அந்தப் பதிவில், ‘நீதிபதி நாரிமன்: உங்கள் கோரிக்கைதான் என்ன?

வைகோ: ஆலையைத் திறக்குமாறு இன்று தீர்ப்பு அளிக்க வேண்டாம் எனக் கோருகின்றேன். செவ்வாய்க் கிழமை அமர்வில், எங்கள் தரப்பு வாதங்களை முழுமையாகக் கேளுங்கள். நீங்கள் ஜனவரி 8 ஆம் தேதியன்று இந்த உச்சநீதிமன்றத்தில், ஸ்டெர்லைட் வழக்கில் மனு தாக்கல் செய்ய, எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. ஆனால், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது என்று, ஸ்டெர்லைட் தரப்பில் இருந்து எனக்கு எந்தத் தகவலும் கொடுக்கப்படவில்லை. நானாகக் கேள்விப்பட்டுத்தான் வந்தேன்.

நீதிபதி நாரிமன்: உங்களுக்கு முறையாகத் தகவல் அனுப்பப்படும். செவ்வாய்க்கிழமை அமர்வில் உங்கள் வாதங்களை முன்வைக்கலாம்.

வைகோ: எனக்கு 40 நிமிடங்கள் தர வேண்டுகிறேன்.

நீதிபதி நாரிமன்: ஆகட்டும்.

இதன்பிறகு, ஆலையைத் திறக்க இன்றே உத்தரவிட வேண்டும் என்று ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் விடுத்த கோரிக்கையை, நீதிபதி ஏற்கவில்லை. செவ்வாய்க்கிழமை அமர்வில் வாதங்களைக் கேட்கிறோம் என்றார்.

நீதிமன்றத்தில் இருந்த ஏராளமான மூத்த வழக்கறிஞர்கள், வைகோவின் கரங்களைப் பற்றி, ‘இன்று நீங்கள் ஜெயித்து விட்டீர்கள். இன்று நீங்கள் இப்படி வாதாடி இருக்காவிடில், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கும் ஆணை இன்றே வந்திருக்கும்' என்றனர்.

‘இந்த நாள், என் பொது வாழ்வில் நான் ஒன்றைச் சாதித்தேன் என மகிழ்வூட்டுகின்ற நாள்' என்று வைகோ செய்தியாளர்களிடம் கூறினார்' என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னதாக ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழக அரசு, அரசாணை வெளியிட்டு மூடியது. அதற்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் உத்தரவளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் ஆலைத் திறப்புக்கு தடை விதித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக வேதாந்தா குழுமம் மேல்முறையீடு செய்து, இடைக்காலத் தடை வாங்கியது. தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. 

.