This Article is From Dec 19, 2018

ஸ்டெர்லைட் விவகாரம்: பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுவதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
Tamil Nadu Posted by

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுவதை எதிர்த்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின் பேரில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

இதனை எதிர்த்து வேதாந்தா குழுமம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஆலை குறித்து ஆய்வு செய்ய ஒய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு ஆய்வு நடத்துமாறு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இதையடுத்து, ஆலையை ஆய்வு செய்த நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு ஆலையை திறக்கலாம். ஆலையை மூடியது சரியல்ல எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் சமீபத்தில் அறிக்கை அளித்திருந்தது.

Advertisement

இதனையடுத்து தொடர்ந்து வழக்கு விசாரணை நடத்தப்பட்டு, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்று, விசாரணை முடிவடைந்ததை அடுத்து, சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், 3 வாரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொள்ள வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆணை பிறப்பித்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Advertisement

இதனிடையே தூத்துக்குடியைச் சேர்ந்த பாத்திமா என்பவர், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க உத்தரவிட்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்துள்ளார்.

நீதிபதிகள் சசிதரன் மற்றும் ஆதிகேசவன் முன்னிலையில் இந்த மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அதனை மனுவாக தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு இன்று அல்லது நாளை விசாரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Advertisement