This Article is From Oct 29, 2018

ஸ்டெர்லைட் விவகாரம்: விசாரணை மனநிறைவு அளிக்கிறது! வைகோ

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆய்வு நடத்திய ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான விசாரணை மனநிறைவு அளிக்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் விவகாரம்: விசாரணை மனநிறைவு அளிக்கிறது! வைகோ

தென்னிந்திய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆய்வுக்குழு நடத்திய கருத்துக் கேட்புக்கூட்டம் இன்றுடன் நிறைவு பெற்றது.

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயத்தால் ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு கடந்த மூன்று நாட்களாக சென்னை எழிலகத்தில் உள்ள தென்னிந்திய பசுமைத் தீர்பாயத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தியது.

இதில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தரப்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் ஆஜராகினர். இந்த கூட்டத்திற்கு பின்னர் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,

தருண் அகர்வால் தலைமையிலான விசாரணை நிறைவடைந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் மக்களின் உயிருக்கு ஆபத்து உள்ளதால், 10 லட்சம் மக்களின் குரலாக நாங்கள் பிரதிபலிக்கிறோம். தருண் அகர்வால் தலைமையிலான இந்த விசாரணை மனநிறைவு அளிக்கிறது என்றார்.

மேலும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வகையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என அவர் கூறினார்.

.