Read in English
This Article is From Jan 30, 2019

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக்கூடாது! - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

சுற்றுச்சூழல் விதிகளை மீறியதால்தான், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது

Advertisement
இந்தியா
New Delhi:

சுற்றுச்சூழல் விதிகளை ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து மீறி வருகிறது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக வேதாந்தா குழுமம், தமிழக அரசு ஆகியவையும் வைகோ உள்ளிட்டோரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் மூத்த வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜரான போது, ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்டுள்ள மாசு குறித்து தருண் அகர்வால் விசாரணைக் குழுவிடம் தமிழக அளித்த விவரங்கள் பரிசீலிக்கப்படவில்லை.

ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு, நிலத்தடி நீர் மாசு ஆகிவற்றுக்கு அந்த நிறுவனமே காரணமாகும். மாசு தொடர்பான அனைத்துத் தரவுகளை கொடுத்தும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும், ஆலையை ஆய்வு செய்த விசாரணைக் குழுவும் கருத்தில் கொள்ளவில்லை. அறிவியல்பூர்வமான ஆதாரம் இல்லை என விசாரணைக் குழு தெரிவித்தது ஏற்க கூடிய வகையில் இல்லை. சுற்றுச்சூழல் விதிகளை மீறியதால்தான், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அவர் வாதிட்டார்.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்குரைஞர் குரு கிருஷ்ண குமார் வாதிடுகையில், 2013-ஆம் ஆண்டு தொடங்கி பல்வேறு கால கட்டத்தில் சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாடு விதிகளை ஸ்டெர்லைட் மீறியது. இந்நிலையில், ஆலையைத் திறப்பதற்கு என்ஜிடி அனுமதித்தது ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை என்றார். இதையடுத்து, இது தொடர்பான விசாரணை வியாழக்கிழமையும் (ஜனவரி 31) நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement
Advertisement