This Article is From Nov 28, 2018

புத்தாண்டில் ஆலை திறக்கப்படுவது உறுதி!’- ஸ்டெர்லைட் குறித்து ராமதாஸ்

ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நிறுவனம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது

புத்தாண்டில் ஆலை திறக்கப்படுவது உறுதி!’- ஸ்டெர்லைட் குறித்து ராமதாஸ்

ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நிறுவனம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலை குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் செய்யப்பட்ட ஆய்வு குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை, ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக இருக்கிறது என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ், ‘புத்தாண்டில் ஆலை திறக்கப்படுவது உறுதி' என்று ட்வீட் செய்துள்ளார்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சார்பில், தருண் அகர்வாலா தலைமையில் அமைந்த வல்லுநர் குழு தாக்கல் செய்த அறிக்கையில், ‘தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு' என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதையடுத்து தீர்ப்பாயம் தமிழக அரசை, ஒரு வாரத்தில் அறிக்கை குறித்து பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு மீண்டும், டிசம்பர் 7 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தீர்ப்பாயம் கூறியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ராமதாஸ், ‘ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை ஏற்க முடியாது என வல்லுனர் குழு அறிக்கைத் தாக்கல். இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான். நான் முன்பே கூறியது தான். புத்தாண்டில் ஆலை திறக்கப்படுவது உறுதி. உலக நீதிமன்றத்துக்கே சென்றாலும் ஆலையை திறக்க முடியாது என்று கூறிய ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றிவிட்டனர்!' என்று ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.

.