This Article is From Jan 21, 2019

“ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வாய்ப்பில்லை”- அடித்துச் சொல்லும் தூத்துக்குடி ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, “ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வாய்ப்பில்லை” என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்

Advertisement
தமிழ்நாடு Posted by

வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தொடர்ந்து சர்ச்சை நிலவி வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, “ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வாய்ப்பில்லை” என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

அவர் மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, “ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி சட்ட ஒழுங்குப் பிரச்னை வந்துவிடக் கூடாது என்பதற்காக, காவல் துறையினர் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள். மீண்டும் அங்கு அசாதாரண சூழல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அந்தப் பணியில் அவர்கள் தொடர்ந்து ஈடுபடத்தான் செய்வர்.

இனி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். ஏனென்றால் தமிழக முதல்வர் ஏற்கெனவே, ஆலை திறக்கப்படாது என்பதை உறுதியாகக் கூறியுள்ளார். எனவே, ஆலையைத் திறக்க வாய்ப்பே இல்லை. மேலும், உச்ச நீதிமன்றத்தில் ஆலையை மூடியே வைப்பதற்கான சட்ட நடைமுறைகள் அலசி ஆராயப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார். எனவே, மக்களுக்கு நான் விடுக்கும் கோரிக்கை ஒன்றுதான். உங்கள் உணர்வுகளை அரசு புரிந்து கொள்கிறது. எனவே மீண்டும் போராட்டத்தில் இறங்க வேண்டாம்” என்று கூறினார்.

Advertisement

கடந்த ஆண்டு, ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச் சூழல் மாசு ஏற்படுவதாக கூறி தொடர் போராட்டங்கள் நடந்தன. இதில் கடந்த ஆண்டு, மே மாதத்தின்போது போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக அரசாணை பிறப்பித்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தது. இதையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தை ஸ்டெர்லைட் நிர்வாகம் நாடியது. இதில் ஆலையை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

Advertisement

இதனை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து ஆலையை திறக்க அனுமதி அளித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத்தில் ஆலையை மூடியே வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது தமிழக அரசு.

Advertisement