New Delhi: ஓரினச்சேர்க்கை குற்றமா என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது, ‘ஓரினச்சேர்க்கையாளர்கள் மீதிருக்கும் களங்கம் விரைவில் நீங்கும்’ என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதும் சட்ட சாசனப் பிரிவு 377 குறித்து பரலவலான விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இது குறித்து கடந்த 2009 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம், ‘பிரிவு 377, சட்ட சாசனத்தை மீறும் வகையில் இருக்கிறது’ என்று தீர்ப்பளித்தது. ஆனால், 2013 ஆம் ஆண்டு இது தொடர்பான வழக்கில், ‘பிரிவு 377 செல்லும்’ என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து, பிரிவு 377-ஐ முழுவதுமாக சட்டத்திலிருந்து நீக்க உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்தான வழக்கு தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று விசாரிக்கப்பட்டு வருகிறது.
மனுதாரர் தரப்பில், ‘சமூகம் ரொம்ப நாளாகவே, ஓரினச்சேர்க்கையாளர்களை கீழ்த்தரமாக நடத்தி, அவர்களுக்கு களங்கள் ஏற்படுத்தி வருகிறது’ என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிமன்றம், ‘ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிராக ஒரு மனநிலை இந்தியர்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ளது. இது ஓரினச்சேர்க்கையாளர்களை மனதளவில் பாதித்துள்ளது. இயற்கையிலேயே பல நூறு உயிரினங்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகின்ற. எனவே, இது இயற்கையான ஒன்று தான். மருத்துவத் துறையிலும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரான மனநிலை இருப்பதால், அவர்களுக்கு சரியான சிகிச்சை கூட கிடைப்பதில்லை’ என்று வருத்தப்பட்டது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிக்ள் நாரிமன், குவாலிகர், சந்திராசுந்த், இந்து மல்ஹோத்ரா ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
சீக்கிரமே 377- வது பிரிவு நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.