This Article is From Oct 29, 2019

சுஜித் அழுகுரல் என்னுள் இன்னும் ஒலிக்கிறது: அமைச்சர் விஜயபாஸ்கர் வேதனை! #RIPSujith

இப்படி எம்மை புலம்பி அழ விடுவாய் என்று எண்ணவில்லை. மனதை தேற்றிக்கொள்கிறேன். இனி நீ கடவுளின் குழந்தை சுஜித் என அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கம்.

Advertisement
தமிழ்நாடு Edited by

மருத்துவமனையில் வைத்து உச்சபட்ச மருத்துவம் வழங்க நினைத்து காத்திருந்தேன் - விஜயபாஸ்கர்

85 அடி ஆழத்தில் நான் கேட்ட உன் மூச்சுச்சத்தம் தான் மீட்பு பணியில் தந்தை ஸ்தானத்தில் இயங்க வைத்தது என்றும் நான் மட்டுமல்ல இந்த உலகமே தன் பிள்ளையாய் நினைத்த சுஜித் அழுகுரல் என்னுள் இன்னும் ஒலிக்கிறது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் வேதனை தெரிவித்துள்ளார். 

கடந்த 25-ம் தேதி மாலை திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை சுஜித் தவறி விழுந்தான். பெற்றோரின் சொந்த இடத்தில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. முதலில் 30 அடியில் குழந்தை சிக்கியிருந்த நிலையில் கயிறு கட்டி குழந்தையை மீட்க முயற்சிக்கும் போது அது தோல்வியில் முடிந்தது. இதில், துரதிர்ஷடவசமாக குழந்தை 30 அடியில் இருந்து வேகமாக கீழே சென்று 70 அடிக்கு சென்று மாட்டிக்கொண்டான்.

இதனிடையே, 70 அடிக்கு சென்ற குழந்தையை சுற்றி மண் விழுந்ததால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது. மண் மூடப்பட்டதால் ஆழ்துளை கிணற்றில் இருக்கும் குழந்தை சுர்ஜித் அசைவின்றி காணப்படுவதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து, பல்வேறு கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டது. எனினும், அதிர்வுகளால் சுஜித் 88 அடிக்கு சென்றுவிட்டான். பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த சுஜித்தின் உடலை இன்று அதிகாலை மீட்டு வெளியே எடுத்தனர். பின்னர், குழந்தையின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

Advertisement

இதனிடையே, குழந்தை இருந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து மருத்துவர்கள் சோதனை செய்ததில் உடல் அதிக அளவில் சிதைந்துவிட்டது தெரியவந்தது என நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்தார்.

சுஜித்தின் உடலுக்கு மருத்துவமனையில் உடனடியாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் சுஜித்தின் உடல் உடனடியாக நடுக்காட்டுப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். இதைத்தொடர்ந்து, குழந்தை சுஜித்தின் உடல் ஆவாரம்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Advertisement

குழந்தை சுஜித்தின் மீட்பு பணிகளில் ஆரம்பம் முதல் அந்த இடத்திலேயே இருந்து அனைத்து பணிகளையும் கவனித்து வந்த அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள இரங்களில், நீ எப்படியும் வந்து விடுவாய் என்றுதான் ஊன் இன்றி உறக்கம் இன்றி இரவு பகலாய் இமை மூடாமல் உழைத்தோம். மருத்துவமனையில் வைத்து உச்சபட்ச மருத்துவம் வழங்க நினைத்து காத்திருந்தேன். 

இப்படி எம்மை புலம்பி அழ விடுவாய் என்று எண்ணவில்லை. மனதை தேற்றிக்கொள்கிறேன். இனி நீ கடவுளின் குழந்தை சுஜித். 85 அடியில் நான்  கேட்ட உன் மூச்சு சத்தம்தான் என்னை தந்தை ஸ்தானத்தில் மீட்புப்பணியில் ஈடுபட வைத்தது. நான் மட்டுமல்ல இந்த உலகமே தன் பிள்ளையாய் நினைத்த சுஜித் அழுகுரல் என்னுள் இன்னும் ஒலிக்கிறது என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார். 

Advertisement