This Article is From Aug 25, 2020

ஓராண்டிற்கு சுங்ககட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்; சீமான் கோரிக்கை

மொத்தமாக வசூலிக்க முயலும் தனியார் நிறுவனங்களின் இலாபவெறி வேட்டைக்கு மட்டும் அவசர அவசரமாக அரசு அனுமதியளிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

ஓராண்டிற்கு சுங்ககட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்; சீமான் கோரிக்கை

ஓராண்டிற்கு சுங்ககட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்; சீமான் கோரிக்கை

பொருளாதார தேக்க நிலையை கருத்தில் கொண்டு சுங்கசாவடிக் கட்டணத்தை உயர்த்தும் முடிவைக் கைவிட்டு, அடுத்த ஓராண்டிற்காவது சுங்கக்கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, கடந்த 5 மாதத்திற்கும் மேலாகத் தொடரும் ஊரடங்கால் நாடு முழுவதும் தொழில்கள், வேலைவாய்ப்பு என யாவும் பாதிக்கப்பட்டு மிகப்பெரும் பொருளாதார முடக்கமும், பணவீக்கமும் நிலவும் நிலையில் நடுத்தர வர்க்கத்தினரும், அடித்தட்டு உழைக்கும் மக்களும் பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்து, அத்தியாவசியத் தேவைகளுக்கே வழியற்று நிற்கையில், சுங்கச்சாவடிக் கட்டணம் உயர்த்தப்பட்டால் அது அவர்கள் தலை மீது விழும் பேரிடியாய் மாறும் என்பதில் ஐயமில்லை.

ஏற்கனவே பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள வாகன உரிமையாளர்கள் இந்தச் சுங்கச்சாவடி கட்டண உயர்வால் மேலும் பாதிப்படைவார்கள். போக்குவரத்துச் செலவு அதிகரிப்பால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயர்ந்து ஏழ்மையிலும், வறுமையிலும் உழன்று கொண்டிருக்கும் அடித்தட்டு உழைக்கும் மக்களைப் பட்டினிச்சாவை நோக்கித் தள்ளும் கொடுங்கோல் நடவடிக்கையாகும்.

அதளபாதாளத்திற்குச் சென்றுவிட்ட பொருளாதாரத்தை மீட்டெக்க எவ்வித முன்னெடுப்புகளையும் எடுக்காது விட்டுவிட்டு, ஊரடங்கால் ஆறுமாதகாலமாக வசூல் செய்ய முடியாத கட்டணத்தொகையினை மொத்தமாக வசூலிக்க முயலும் தனியார் நிறுவனங்களின் இலாபவெறி வேட்டைக்கு மட்டும் அவசர அவசரமாக அரசு அனுமதியளிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

சொந்த நாட்டிலேயே 50 கிலோ மீட்டருக்கு ஒருமுறை கட்டணம் செலுத்திப் பயணம் செய்வதென்பது ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்கூட இல்லாத அடிமை நிலையாகும். அதிலும் ஊரடங்கு முழுதாக நீக்கப்படாத, பொதுப்போக்குவரத்தும் தொடங்கப்படாத இந்நேரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், சிறு, குறு தொழில் செய்பவர்கள், வாடகை வாகனங்களில் பணிகளுக்குச் செல்லவேண்டிய நிலையில்தான் தற்போது உள்ளனர். அத்தகைய பரிதாபகரமான நிலையிலுள்ள மக்களை ஏதோ ஒரு தனியார் நிறுவனத்தின் இலாபத்தேவையை மட்டும் கருத்திற்கொண்டு கசக்கிப் பிழிவது அவர்களின் குருதியை உறிஞ்சி குடிக்கும் இழிசெயலாகும்.

கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்கள் விடுபட ஆண்டுக்கணக்கில் ஆகலாம் எனும் நிலையில் இப்பேரிடர் காலக்கட்டத்தில் அவர்களுக்குத் தேவையான உதவிகளைத் தந்து உறுதுணையாக இருக்க வேண்டிய மத்திய அரசு, அதற்கு நேர்மாறாக ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் வகையில், தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக அவசர அவசரமாகச் சுங்கச்சாவடிகளில் 10 விழுக்காடு அளவுக்குக் கட்டண உயர்வுக்கு அனுமதி வழங்கியுள்ளது வெந்தப்புண்ணில் வேலைப் பாய்ச்சுவதற்கு ஒப்பாகும்.

ஆகவே, சுங்கச்சாவடிகள் எவ்விதக் கட்டண உயர்வையும் நடைமுறைப்படுத்த அனுமதிக்கக் கூடாது எனவும், தற்போதைய பொருளாதாரத் தேக்க நிலையைக் கருத்தில் கொண்டு அடுத்த ஓராண்டிற்குச் சுங்கக்கட்டண வசூலை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 

.