This Article is From Jun 22, 2020

வருவாய் ஈட்ட முடியாத வழித்தடங்களில் ரயில் சேவைகளை நிறுத்துவதா? ராமதாஸ் கண்டனம்

ஒரு நாட்டில் அனைத்து வழித்தடங்களிலும் ரயில் சேவையை லாபகரமாக இயக்கிவிட முடியாது. அது அமெரிக்கா உள்ளிட்ட உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட சாத்தியமல்ல.

வருவாய் ஈட்ட முடியாத வழித்தடங்களில் ரயில் சேவைகளை நிறுத்துவதா? ராமதாஸ் கண்டனம்

வருவாய் ஈட்ட முடியாத வழித்தடங்களில் ரயில் சேவைகளை நிறுத்துவதா? ராமதாஸ் கண்டனம்

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் போதிய அளவில் வருவாய் ஈட்ட முடியாத வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களின் சேவைகளை நிறுத்துவது குறித்து பரிசீலிக்கும்படி ரயில்வே துறைக்கு இந்திய ரயில்வே வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது தமிழ்நாட்டின் ரயில் வரைபடத்தையே சிதைக்கும் தன்மை கொண்டதாகும்; இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

ரயில்வே துறை செலவுகளைக் குறைப்பதற்கான பல்வேறு வழிகாட்டுதல்களை ரயில்வே துறை பொது மேலாளர்களுக்கு இந்திய ரயில்வே வாரியத்தின் நிதி ஆணையர் மஞ்சுளா ரங்கராஜன் அனுப்பியுள்ளார். அதில் முக்கியமாக இடம்பெற்றுள்ள பரிந்துரை என்னவென்றால், 'எந்தெந்த கிளை வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்கள் வருவாய் ஈட்டவில்லையோ, அந்த ரயில்கள் அனைத்தின் சேவைகளையும் எந்த அளவுக்கு நிறுத்த முடியுமோ, அந்த அளவுக்கு நிறுத்த வேண்டும்' என்பதுதான். அதாவது வருமானம் இல்லாத வழித்தடங்கள் அனைத்தையும் மூடிவிட்டு, அதிக லாபம் ஈட்டும் வழித்தடங்களில் மட்டும் ரயில்களை இயக்கலாம் என்பது தான் இதன் பொருளாகும்.

அதன்படி பார்த்தால், தமிழ்நாட்டில் சென்னை - மதுரை, சென்னை - நெல்லை, சென்னை - தூத்துக்குடி, சென்னை -நாகர்கோவில், சென்னை - பெங்களூரு உள்ளிட்ட சில வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்கள் மட்டும்தான் லாபத்தில் இயங்குகின்றன. மற்ற வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களின் வருமானம் சொல்லிக் கொள்ளும்படியாக இருக்காது. அதைக் காரணம் காட்டி, அந்த ரயில் சேவைகளை ரத்து செய்ய வேண்டும் என்று நினைத்தால் சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை ஏராளமான கிளை வழித்தடங்களில் ரயில் சேவைகளை நிறுத்த வேண்டிய நிலை உருவாகும்.

ஒரு நாட்டில் அனைத்து வழித்தடங்களிலும் ரயில் சேவையை லாபகரமாக இயக்கிவிட முடியாது. அது அமெரிக்கா உள்ளிட்ட உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட சாத்தியமல்ல. ரயில் போக்குவரத்தை மக்களுக்கு வழங்கப்படும் சேவையாகப் பார்க்க வேண்டுமே தவிர, வருமானம் ஈட்டும் வழியாகப் பார்க்கக்கூடாது. கிளை வழித்தடங்களில் ரயில் சேவையை நிறுத்திவிட்டு, முதன்மை வழித்தடங்களில் மட்டுமே ரயில்களை இயக்குவது சாத்தியமில்லை.

எனவே, வருவாய் இல்லாததைக் காரணம் காட்டி ரயில் சேவைகளை நிறுத்தும் திட்டத்தை இந்திய ரயில்வே வாரியம் கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக ரயில் கட்டமைப்புகளை அதிகரித்து, அதிக அளவில் ரயில்களை இயக்கி, அதை முதன்மைப் போக்குவரத்து முறையாக மாற்றவும், அதன் மூலம் வருவாயை அதிகரிக்கச் செய்யவும் ரயில்வே துறை முன்வர வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார். 

.