வெளியிடப்பட்டது குடிமக்கள் பட்டியலின் வரைவு மட்டுமே என்றும் இதுவே இறுதியானது அல்ல என்று அரசு உறுதி
New Delhi: அசாம் குடிமக்கள் பட்டியலின் இறுதி வரைவில் 40 இலட்சம் மக்கள் விடுபட்ட விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் புயலைக் கிளப்பியுள்ளது. மாநிலங்களவையில் அமித் ஷா இதுகுறித்து பேச எழுந்தபோது அமளி ஏற்பட்டது. மக்களவையிலும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. காங்கிரசும் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசும் அவையின் இன்றைய அலுவல்களை ரத்து செய்துவிட்டு, குடிமக்கள் பட்டியல் பற்றி விவாதிக்க வேண்டும் என்று கோரின. அகில இந்திய காங்கிரசு கட்சி இது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இது மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் விவகாரம் மட்டுமல்ல, வங்கதேசம் முதலிய அண்டை நாடுகளுடனான உறவையும் பாதிக்கும் விசயம் என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த பத்து முக்கியத் தகவல்கள்:
1) நேற்றும் இதுதொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் எம்பிக்கள் அவையில் முழக்கங்களை எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டதால், பிற்பகல் ஒருமணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியபோது மீண்டும் போராட்டங்கள் எழுந்தன. இதனால் மாநிலங்களவை நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.
2) எதிர்க்கட்சிகளின் முழக்கங்களினால் பாதியிலேயே அமித் ஷாவின் பேச்சு நிறுத்தப்பட்டது. அதில் அவர், “முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் செய்ய முடியாததை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி செய்து காட்டியுள்ளது” என்றார். மேலும் அவர், ”காங்கிரசின் ராஜிவ் காந்திதான் சட்டவிரோதமாக அசாமிற்குக் குடிபெயர்ந்தவர்களை வெளியேற்றும் நோக்கத்திலான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்” எனவும் தெரிவித்தார்.
3) திரிணாமூலின் சுகேந்து ராய் “ஆறு மாதத்துக்கு முன்பு, அரசுத் தரவில் 2.4 இலட்சம் மக்கள் ஐயத்துக்கிடமான வாக்காளர்கள் என்று பட்டியலிடப்பட்டிருந்தனர்” என்றார். இதுபற்றிய உச்சநீதிமன்றத்தின் கருத்தையும் படித்துக்காட்டிய அவர், “எல்லாம் உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெறுகிறது எனக் கூறுவது முழுப் பொய். இவ்விவகாரத்தில் நாம் மனித உரிமைகள் சார்ந்தும் முடிவெடுக்க வேண்டியுள்ளது” என்றார்.
4) மாநிலங்களவையின் தலைவர் வெங்கையா நாயுடு, “இவ்வுணர்ச்சிகரமான விவகாரம் குறித்து பதிலளிக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவையில் தன் பணிகளை முடித்துவிட்டு இங்கு வருவார்” என்று உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.
5) மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ”தேசிய குடிமக்கள் பதிவேடு ஒரு சிக்கலான விஷயம். இதனை கவனமாகக் கையாளவேண்டும். உண்மையான இந்தியக் குடிமக்களுக்கு இதில் அநீதி இழைக்கப்படக்கூடாது. இது குறித்து எமது கட்சி நிச்சயம் அரசோடு பேசும் என்று உறுதியளிக்கிறேன்” என்றார்.
6) நேற்றும் மாநிலங்களைவையில் மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் நாள் முழுதும் அவை நடவடிக்கைகள் முடக்கப்பட்டன.
7) வங்கதேசத்திலிருந்து குடிபெயர்ந்தவர்களை வெளியேற்றுகிறோம் என்ற போர்வையில் இந்த அரசு அசாமின் முஸ்லிம்களைக் குறிவைத்துத் தாக்குகிறது என்று காங்கிரசும் திரிணாமுல் காங்கிரசும் அரசின் மீது குற்றம்சாட்டியுள்ளன. மம்தா பானர்ஜி நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், “மனிதத்தையும் மனிதர்களையும் தனது வாக்கு வங்கி அரசியலுக்காக வலுக்கட்டாயமாக வெளியேற்றி அவர்களைத் தனிமைப்படுத்துவதுதான் இவ்வரசின் திட்டம்” என்று கூறியுள்ளார்.
8) 1951க்குப் பிறகு முதன்முறையாக, வங்கதேசத்திலிருந்து சட்டத்துக்குப் புறம்பாகக் குடிபெயர்ந்தவர்களை அடையாளம் காணுவதற்காக, அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு புதுப்பிக்கப்படுகிறது.
9) கடும் எதிர்ப்பு கிளப்பியதை அடுத்து, “தற்போதுள்ள குடிமக்கள் பட்டியலில் விடுபட்டவர்கள் தங்களது குடியுரிமையை நிரூபிக்க போதுமான வாய்ப்புகள் தரப்படும். அதுவரை யாரும் அந்நிய நாட்டினராக அறிவிக்கப்படவோ, நாட்டிலிருந்து வெளியேற்றப்படவோ மாட்டார்கள்” என மத்திய உள்துறை அமைச்சகமும் அசாம் அரசாங்கமும் தெரிவித்துள்ளன.
10) மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “தேசிய மக்கள் பதிவெடு விவகாரத்தை அரசியலாக்கி மக்களிடையே அச்சத்தை உண்டாக்க வேண்டாம்” என எதிர்க்கட்சிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார். பட்டியலில் தங்கள் பெயர் இல்லாதவர்களும் வெளிநாட்டினருக்கான தீர்ப்பாயத்தை நாடலாம் என்றும் வலுக்கட்டாயமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.