This Article is From Nov 15, 2018

கஜா புயல் எதிரொலி: கடலூர் மற்றும் நாகையில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

கஜா புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, கடலூர், நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் எதிரொலி:  கடலூர் மற்றும் நாகையில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

'கஜா' புயல் இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கடலூர் மற்றும் பாம்பனுக்கு இடையில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான கஜா புயல் தற்போது நாகையின் வட கிழக்கே 187 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.

புயல் கரையைக் கடக்கும் போது கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 20செ.மீ.க்கு மேல் மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனிடையே புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்று வீசும் என்பதால் மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க வேண்டாம் என போக்குவரத்து துறைக்கு வருவாய்த்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதேபோல் சென்னை எழும்பூரிலிருந்து காரைக்காலுக்கு செல்லும் வேளாங்கன்னி விரைவு ரயில், மன்னார்குடி விரைவு ரயில், தஞ்சாவூர் செல்லும் உழவன் விரைவு ரயில் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் கடலூர் மற்றும் நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

.