ஹைலைட்ஸ்
- பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை
- கடுமையான சட்டங்கள் மட்டுமே பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்காது
- பாலின கல்வியை இன்னும் விரிவாக கொண்டு சேர்க்க வேண்டும்.
பல அமைப்புகள் கட்சிகள் என எல்லோருமாய் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக குரல் எழுப்புகிறோம். ஆனாலும், இம்மாதிரியான சம்பவங்கள் குறைந்தபாடில்லையே. இதற்கான தீர்வுதான் என்ன?
“பொதுவாக எல்லோரும் எதிர்பார்ப்பது என்பது, பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை என்பதுதான். ஆனால், யதார்த்தத்தில் கடுமையான சட்டங்கள் மட்டுமே பெண்களுக்கு எதிரான வன்முறையை முற்றிலுமாக தடுத்து நிறுத்திவிடுவதில்லை. கடுமையான சட்டங்களுடன் மாற்று சிந்தனையும் நமக்கு அவசியமாகிறது. பொது சமூகத்தில் பெண்கள் இரண்டாம் நிலையிலேயே வளர்க்கப்படுகின்றனர். உதாரணத்திற்கு நமது வீட்டு சூழலையே எடுத்துக்கொள்ளுங்கள். பெண்ணுக்கான கட்டுப்பாடுகளும் ஆண்களுக்கான அனுமதிப்புகளும் என்னென்ன என்பதை நாம் கண்ட பின்னரும் மிக இயல்பாக கடந்து செல்கிறோம்.
பெண்களை எழுத்தாளர், கவிஞர், அரசியல்வாதி, மருத்துவர், ஆசிரியர் என பார்ப்பதற்கு முன்னர், அவள் ஒரு பெண் என்றே ஆண்கள் பெண்களை அணுகுகின்றனர்.
பெண்கள் மீதான வன்முறை நிகழும்போது, இச்சமூகம் அறிவுரை என பெண்களிடத்தில்தான் போய் முதலில் நிற்கிறது. இங்கு அறிவுரை வழங்க வேண்டியது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அல்ல என்பதை எப்போது இச்சமூகம் உணர்கின்றதோ அப்போதுதான் ஆண் பெண் சமத்துவத்தின் முதல் நிலைக்கு சமூகம் முன்னேறும். இப்படியான புரிதல் திடீரென வானத்திலிருந்து குதித்து வந்துவிடாது. குழந்தை பருவத்திலிருந்து நாம் இப்படியான புரிதலை உருவாக்க வேண்டும். பாலின கல்வியை இன்னும் விரிவாக கொண்டு சேர்க்க வேண்டும்.
பெண்களுக்கு எதிரான வன்முறை மேலும் மேலும் தலை தூக்குவதற்குத் தாமதமான நீதியும் மிக முக்கிய காரணம். சில விதிவிலக்கான வழக்குகளிலேயே நீதி விரைவாக கிடைக்கச் செய்கின்றது. நிர்பயா வழக்குக்கும் வாச்சாத்தி வழக்கிற்கும் நீதி கிடைப்பதற்கான கால இடைவெளி என்ன என்பதை நாம் பார்த்ததுதான். இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு பிரச்னை, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் புகைப்படத்தினை வெளியிடுவது. பொள்ளாச்சி வழக்கில் ஒரு பொறுப்புள்ள காவல்துறை அதிகாரி, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை பொது வெளியில் பகிர்ந்துள்ளார். இதன் மூலமாக பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் புகார் கொடுக்க முன் வருவதை தடுத்து நிறுத்த அல்லது மிரட்ட எத்தனிக்கிறார். இவையெல்லாம் பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுக்க வேண்டி காவல்துறை யதார்த்தத்தில் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
ஆக பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்திட சட்டம் மற்றும், கருத்தியல் என இருதளங்களிலும் நாம் அதீத கவனம் செலுத்த வேண்டும்.“
பொதுவெளியில் ஒரு பெண்ணியவாதியாகவோ அல்லது ஒரு அரசியல் கட்சியின் பிரதிநிதியாகவோ பங்கேற்கும் பொது, அவர்கள் மீது நிகழ்த்தப்படும் கருத்தியல் ரீதியான தாக்குதல்களை எவ்வாறு கையாள்வது?
“இப்படியான சூழலை நானும் எதிர்கொண்டிருக்கின்றேன். பொதுத்தளங்களில் பெண்களுக்கு எதிரான கருத்தியல் தாக்குதல் நிகழ்த்தப்படும்போது அதை எதிர்த்து நிற்பதே சிறந்த தீர்வாக இருக்க முடியும். மக்களும் இவ்வாறு எதிர்த்து நிற்கும் பெண்களுக்கு தங்கள் ஆதரவினை வழங்குகிறார்கள். கருத்தியல் ரீதியான தாக்குதல்களை நேருக்கு நேராக எதிர் கொள்வதை விட ஒரு பொருத்தமான தீர்வு இருக்க முடியாது.“